Monday, May 28, 2018

மீனவ நண்பர்கள்

எனது மச்சினன் செந்தில் வீட்டிற்கு சென்னை சென்ற போது, பழவேற்காடு பகுதியிலிருந்து மீனவர்கள் செல்லும் படகு வழியாக சென்றால் தனித்தீவுகள் இருப்பதாகவும், அது வித்தியாசமான அனுபவமாக இருக்கும் எனக்கூறி எங்கள் பயணத்தை திட்டமிட்டிருந்தார்.

அவர் வீடான பெருங்குடியில் இருந்து, கிட்டத்தட்ட எழுபது கிலோ மீட்டர் தூரத்தில் இருப்பதாகவும் அது மீனவர்கள் வாழும் பகுதி எனவும் முன்னுரை தந்தார். எனக்கு சென்னை மனிதர்கள் மீதும், மீனவர்கள் மீதும் கரடுமுரடானவர்கள், மரியாதை தெரியாத பேச்சுக்கு சொந்தக்காரர்கள் என்ற பொது புத்தி இருந்தது. அதன் யோசிப்பிலேதான் அங்கே சென்றேன். நாங்கள் குடும்பமாக சென்று கொண்டிருந்தோம் இரண்டு குழந்தைகள் வேறு. அங்கிருந்த மாதா கோவிலை நெருங்கிய போது சுற்றிலும் மீன் வாசனை, குடிசைகளும் சிறு வீடுகளும் அடங்கிய பகுதி, லுங்கி கட்டிக்கொண்டு பீடி பிடித்தபடி "இன்னா" என்ற மனிதர்கள் வரவேற்றார்கள்.

பரசுராம் என்பவரை தேடி அங்கே போனோம், அவர் கடலுக்குள் மீன் பிடிக்க சென்று விட்டதால், அவரின் மருமகன் தினேஷ் எங்களை வரவேற்றார். அவர் ஏனோ சற்று பரபரப்பாகவே இருந்த போதிலும், பார்த்த முதல் வார்த்தையே "துன்னாச்சா" என்றார். கையில் சாப்பாடு எடுத்து வந்திருக்கிறோம் என்று சொன்னதும், "பரவால்ல நம்ம ஊட்டுல பிரியாணி துன்ணுட்டு போலாம் சார்" என்று வற்புறுத்தினார்.
"பரவாலைங்க, போயிட்டு வந்து பாத்துக்கலாம்" என்று தப்பித்து சென்று படகு இருக்கும் இடம் கேட்டோம். அவர் தனது மாமா என்று ஒரு வயதானவரை அறிமுகம் செய்து வைத்து அவருடன் அனுப்பி வைத்தார், படகில் ஏறிய சிறிது நேரத்திலேயே என்ன மாயம் செய்தாரோ அந்த முதியவர் எங்கள் குழந்தைகள் அவரிடம் ஒட்டி கொண்டன.  சிரித்து விளையாடியபடியே சென்ற அந்த பயணம் வெகு நிறைவு, மாசு படறா மேகமும், குப்பைகள் இல்லா கரையும் சுத்தமான பகுதியும் எங்களை  ஆச்சரியத்திலும் பேரழகிலும் ஆழ்த்தின.

பயணம் முடித்து திரும்பி கரைக்கு வரும்போது எனக்கு ஏனோ அந்த பெரியவரின் மேல் இனம் புரியா ஈர்ப்பு இருந்தது. "நீங்களும் மீன் தான் பிடிக்கறீங்களா?" என்று கேட்டதற்கு "இல்ல தங்கம், நான் தினேஷ் தங்கச்சி கண்ணாலத்து வந்தேன் அவனுக்கு நெறையா வேல கெடக்கு அதான் ஹெல்ப் பண்றேன்" என்றார். எல்லோரையும் "தங்கம்" என்றே அழைத்தார்.

"எப்போ கண்ணாலம்?" என்று அவர் பாஷைக்கே மாற முயற்சித்தேன். "இன்னம் ஒரு வாரம் இருக்கு" ஒரு வாரத்திற்கு முன்பே சொந்தங்கள் வந்து தங்கி கல்யாண வேலைகளை பகிர்ந்து இயன்ற வரை பண உதவி செய்து திருமணத்தை சிறப்பித்து விட்டு செல்வார்களாம்.

 "நான் தினேஷ் வீட்டுக்கு வரலாமா?" என்று கேட்ட உடனே "வா தங்கம்" என்று கை பற்றி அழைத்து சென்றார். இவ்வளவு வாஞ்சையான கை பற்றுதலை என் பாட்டிக்கு பிறகு இவரிடம் தான் உணர்ந்தேன்

சுற்றிலும் மீன் வாசம் கமழ, "கொட்டு கலி கொட்டு நாயனம் கேட்குது" என்ற
மைக் செட் பாடலுடன் அமர்க்கள பட்டு கொண்டிருந்தது ஒரு வீடு. தினேஷ் வாழை மரம் கட்டி கொண்டிருந்தவர் எங்களை பார்த்து ஓடி வந்தார்.
"கிளம்பறோம் என்று சொல்ல வந்தோம்" என்றேன், "இன்னா சார் நீ? லேடீஸ் வந்துருக்காங்க வீட்டுக்கு வாங்க, என்று ஒரு குழந்தையை அழைத்து "மேகா, ரெண்டு அக்காவையும் கூட்டிட்டு போய் கால் கழுவ வையி" என்றார், நாங்கள் தயங்க "அட போ தங்கச்சி" என்று அருகில் இருந்த வீட்டிற்குள் செல்ல வைத்தார். பின்னர் எங்களை பார்த்து "நமக்கென்ன சார், எங்க வேனா மூத்திரம் போவோம், லேடீஸ் என்ன பண்ணுவாங்க, இன்னும் ரெண்டு மணி நேரமாகும் நீங்க வீட்டுக்கு போக" என்றார். அதற்குள் எனக்கும் செந்திலுக்கு காபி வந்து சேர்ந்தது. வீட்டை விட்டு வெளியே வந்த இருவரும், "வீடு சின்னதா இருந்தாலும் எவ்ளோ அழகா இருக்கு தெரியுமா? சாப்பிட சொல்லி ஒரே வற்புறுத்தல், இப்போ தான் சாப்பிட்டோம்னு சொன்ன உடனே வீட்டுக்கு வந்திருக்கே ஸ்வீட் சாப்பிடாம போக கூடாது"ன்னு சாப்பிட வச்சு அனுப்பினாங்க என்றார்கள்.

மிக எளிய வாழ்க்கை வாழ்கிற, மனதில் ஈரம் கொண்ட, யாரென்றே தெரியாமல் வரவேற்கிற, ரோட்டில் யாராவது அடிபட்டால் உடனே முதலில் ஓடிப்போய் தூக்குகிற உண்மையான மனிதர்களையே  என் வாழ்வில் இப்போதுதான் சந்திக்கிறேன். அடுத்தமுறை நான்கு நாள் தினேஷ் வீட்டில் தங்க அனுமதி கேட்டிருக்கிறேன். "ஒரு போன் பண்ணிட்டு எப்ப வேனா வா, நான் இருந்தாலும் இல்லான்னாலும் நம்மாளுங்க இருப்பாங்க, ஜாலியா இருந்துட்டு போலாம்" என்றார். அங்கே போய் இரண்டு நாட்களாவது தங்கிவிட்டு தினேஷையும், பெரியவரையும் நான்கு நாட்களுக்கு என் வீட்டிற்கு இழுத்து வந்துவிட வேண்டும் என்பது எனது அடுத்த பயண திட்டம்

Friday, May 4, 2018

முதல் விமான பயணம் -சில டிப்ஸ்

கொஞ்சம் விமான பயணங்களை கடந்து விட்டவன் என்ற முறையில் முதல் விமான பயணம் போகும் ஆசை உள்ளவர்களுக்கான சிறிய வழி காட்டல் இது. (அடிக்கடி விமானத்தில் பறப்பவர்கள் படித்து விட்டு கீழே ஆலோசனை சொல்லுமாறு அன்புடன் கேட்டுக்கொண்டு...)
பதினைந்து நாட்களுக்கு முன்னதாக புக் செய்தால் கூட ஆயிரத்து ஐநூறுக்குள் தமிழ்நாட்டின் உள்விமான போக்குவரத்தோ (சென்னை -கோவை போல), பெங்களூருவோ நீங்கள் தாராளமாக சென்று வரலாம்.
எல்லா விமான நிறுவனங்களும் (Economic flights) தங்களுக்கு பயணிகள் சேரும் வரை offer கொடுத்துக்கொண்டே இருப்பார்கள். கூகுளே (Search: Google flights)  அதன் விலை விபரங்களை தேதி வாரியாக வெளியிடும். எனவே டிக்கெட்டை முன் பதிவு செய்து கொள்ளுங்கள். இறக்கைகள் மறைக்காத கீழே பார்க்கும் வண்ணம் சீட்டை தேர்ந்தெடுங்கள்.

உங்கள் விமானம் புறப்படும் நாற்பத்தி ஐந்து நிமிடங்களுக்கு முன்பே விமான நிலையத்தை அடைந்து விடுங்கள். உள்நாட்டு விமான பயணத்தில் நீங்கள் ஏதாவது ஒரு அரசு ஆதார சான்றிதழை வைத்திருந்தால் போதுமானது (லைசென்ஸ், வோட்டர் ஐடி, ஆதார்)  உங்களுக்கான பயண சீட்டையோ, மொபைலில் உள்ள டிக்கெட்டையோ முன்னால் நின்றிருக்கும் காவல் பாதுகாவலரிடம்  காண்பித்து விமான நிலையத்திற்குள் நுழையுங்கள்.

நீங்கள் எவ்வளவு கிலோ வரை பொருட்கள் கொண்டு செல்லலாம் என்பதை நீங்கள் செல்ல வேண்டிய விமான பயண குறிப்பில் சோதனை செய்து கொள்ளுங்கள். Hand luggage எனப்படும் கைபையில் ஏறக்குறைய பதினைந்து கிலோ வரை அனுமதி இருக்க கூடும். கத்தி, ப்ளேடு, கூர்மையான ஊசிகள், வாசனை திரவியங்கள் போன்ற தடை செய்த பொருட்கள் எவை என்ற குறிப்பை படித்து விட்டு அவற்றை எடுத்து செல்வதை தவிருங்கள்

விமான சீட்டு பாதுகாப்பு முடிந்ததும் உங்களை கைப்பை சோதனை நடக்கும், அதை சோதித்த பின் நேராக நீங்கள் செல்ல வேண்டிய விமானத்தின் அலுவலகம் இருக்கும் பகுதியை கேட்டு தெரிந்து கொண்டு (அழகான பெண்கள் இருப்பார்கள்) அவர்களிடம் போர்டிங் பாஸ் பெற வேண்டும். அங்கேயே உங்கள் விமானம் எந்த வாசலுக்கு வரும், நீங்கள் எங்கு சென்று காத்திருக்க வேண்டும் என்ற தகவலை கூறுவார்கள். விமான நிலையத்தின் காத்திருப்பு அறைக்கு முன் மீண்டும் ஒரு சோதனை நடக்கும்.

உங்கள் பர்ஸ், போன், சாவி, மற்ற எதுவாக இருந்தாலும் கைப்பையில் வைத்து சோதனைக்கு அனுப்ப வேண்டும், இல்லை எனினும் பிளாஸ்டிக் தட்டு வைத்திருப்பார்கள் அதில் வைக்கவும். உங்களது போர்டிங் பாஸ் மற்றும் டிக்கெட்டை மட்டும் கையில் வைத்திருங்கள், அதை சரி பார்த்த பின் கையை விரிக்க சொல்லி சோதனை நடத்துவார்கள். அதன் பின் நீங்கள் காத்திருப்பு அறைக்குள் சென்று உங்களது விமானத்திருக்காக காத்திருக்க வேண்டியது தான்

காத்திருப்பு பகுதியில் உங்கள் விமானத்திற்கான அறிவிப்பு வந்ததும் வரிசையில் சென்று போர்டிங் பாஸ் கொடுத்து அவைகளை சரி பார்த்த பின் உங்களை விமானத்தின் அருகில் அழைத்து செல்ல ஒரு பஸ் நின்றிருக்கும்.
அல்லது ஒரு சில தளங்களில் நேரடியாகவே செயற்கை படிகள் வைத்து விமானத்திற்குள் செல்லும் அமைப்பு இருக்கும்.

விமானத்தில் ஏறியதும் சிரித்தபடி வரவேற்க விமான பணிப்பெண்கள் இருப்பார்கள், Air India, spicejet  போன்றவற்றில் ஆண்களும் இருந்து கடுப்படிப்பார்கள். இருக்கைகள் எல்லாம் பிரம்மாண்டமாக இருக்கும் என்றெல்லாம் கற்பனை செய்து கொண்டு போகாதீர்கள், உயர்தர பஸ் இருக்கையை போன்றே இருக்கும். ஏனெனில் அது ஏர்பஸ் தானே?   
 விமானத்தில் ஏறியதும் மொபைலை ஆப் செய்தோ அல்லது Airplane மோடிலோ வைக்க சொல்வார்கள் சீட் பெல்ட் போட சொல்லி அறிவுறுத்துவார்கள்.  விமானம் ஒரு குறிப்பிட்ட தூரத்தை ஒரு மணி நேரத்தில் அடையும் என்று கூறினால் ஏற இறங்க மட்டுமே அதில் பாதி நேரத்தை எடுத்து கொள்ளும் பறக்கும் நேரம் அதில் பாதி மட்டுமே.

அவ்வளவுதான்...
சென்று அனுபவித்து விட்டு பின்னூட்டம் இடுங்கள்