Wednesday, March 28, 2018

ஹாசனூர் கோடை வாஸ்தலம்

கொங்கு மண்டலத்தை சேர்ந்த நண்பர்கள் ஒருநாள் பொழுதுபோக்கு வேண்டும் எனில் தாராளமாக ஹாசனூரை தேர்ந்தெடுக்கலாம். (குடும்ப குத்து விளக்குகள், பெண்ணிய போராளிகள் மேற்கொண்டு படிக்க வேண்டாம் உங்களுக்கு உபயோகமாக எதுவும் இல்லை, நண்பன் மேல் அக்கறை உள்ள நல்ல பெண்கள் மட்டும் தொடரவும் )

27 மிக குறுகிய கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட திம்பம் மலை பண்ணாரி வன சோதனை சாவடியிலிலிருந்து ஆரம்பமாகிறது. (லஞ்சமா லாரிக்கு இருநூறு ரூபா வாங்கறாங்க, "சாப்பாட்டுக்கு பதிலா வேறு ஏதாவது சாப்பிடலாமே போலீஸ்கார்"ன்னு கூட திட்டினேன், வேகமா அங்கிருந்த சாவடிக்குள்ள புகுந்துட்டார் ஒரு போலீஸ்)

 மிக கவனமாக மலை ஏறுங்கள், முக்கியமாக டேங்கர் லாரிகள் நிறைய போகும் பாதை அது, நூறு மீட்டர் இடைவெளி விட்டே தொடருங்கள், அவர்கள் கொண்டை ஊசி வளைவுகளில் பின்னால் வந்தே திருப்ப முடிகிறது .

காலையில் நேரத்திலேயே பயணத்தை தொடங்கி விடுவது உத்தமம், ஏனெனில் மான்கள், மயில்கள், முயல்கள், உங்களுக்கு அதிஷ்டம் இருந்தால் கரடி, யானை மற்றும் ஆளை கொல்லும் சிறுத்தை புலிகளைக் கூட காணலாம். நாங்கள் நிறைய மான்களும், மயில்களும், காட்டு பன்றிகளும், ஒரே ஒரு கரடியையும் பார்த்தோம். (கார் பைக் இரண்டும் ஏற்றது)
 திம்பம் மலையில் பாதி தூரம் ஏறும்போதே மெல்லிய குளிர் உங்களை தழுவிக் கொள்ளும்... கொண்டை ஊசி வளைவுகள் முடிந்த பிறகு வனப்பகுதி சோதனை சாவடி அலுவலகம் தாண்டி ஒரு சிறிய கடையில் சுடசுட சிறு பலகாரங்கள் செய்து தருகிறார்கள். நல்ல ருசியும் கூட... (அங்கேயே டச்சர்கள் வாங்கி கொள்க)

தலைக்கு ஐநூறு வீதம் அறை எடுத்து தங்கும் வசதி ஹாசனூர் முழுவதும் நிறைந்து கிடக்கிறது. KAS என்னும் விடுதியில்  நீச்சல் குளம் வெகு சிறப்பு, தேவையான அளவு தண்ணீர் நிரப்பி தருகிறார்கள். அறைகளும் தேறுகிறது.
 சாப்பாடு நன்றாக சமைக்க வரும் எனில் நாட்டு கோழியை வாங்கி காரில் வைத்துக்கொண்டு அங்கு சென்று சமைக்கலாம், சமையலறை, பாத்திரங்கள் எல்லாம் தருகிறார்கள், நாங்கள் அங்கே சென்று சமைத்தோம். இல்லையெனில் அங்கேயே செய்து தர சொல்லியும் சாப்பிடலாம்.


உற்சாக பானம் வாங்க பக்கத்திலேயே டாஸ்மாக் உள்ளது... ஆறு கிலோ மீட்டர் சென்றால் கர்நாடக சரக்கு மளிகை கடைகளிலேயே கிடைக்கிறது (ஹாப் க்கு தாங்கும் என் கஸின் கட்டிங்கிற்கே பாசத்தை கொட்ட ஆரம்பித்தான்) விலை, சுவை, தரம் உத்தரவாதம். இந்த முறை என் தம்பி துபாயில் இருந்தே வாங்கி வந்து விட்டான், இருந்தாலும் நாலு பாக்கெட் வாங்கினோம் (ஆம், அது ஜுஸ் பாக்கெட்களிலும் கிடைக்கிறது)


காலை மூன்று மணியிலிருந்து ஐந்து மணிக்குள் கர்நாடக எல்லை வரை சென்றால் புலி மானை சாப்பிட்டு கொண்டிருக்கும் டிஸ்கவாரி நிகழ்ச்சிகளை   காணலாம் என்றார்கள். (ஏனெனில் அது புலிகள் காப்பகம்) காலை வரை மட்டையாகி விட்டதால் அதை காண இயலவில்லை
ஆக ஒரு நாளை மிக ஜாலியாக நண்பர்களுடன் பொழுது போக்கி வர உகந்த இடம் ஹாசனூர், ஹாசனூர், ஹாசனூர்
-நிறைவு

Tuesday, March 27, 2018

கொச்சி, செராய் பீச்

இரண்டு நாள் பயண திட்டம்.

கடவுளின் சொந்த தேசமான கேரளாவிற்கு அடிக்கடி செல்வதன் முக்கிய காரணம் அது கோவைக்கு அருகில் இருக்கிறது, அதுவுமில்லாமல் நிஜமாகவே இயற்கையை இயற்கையாக வைத்திருக்கிறார்கள்.

 இரண்டு நாளைக்கு முன்பு எதிர்பாராத திட்டமிடுதலில் போர்ட் கொச்சியும் செராயும் செல்ல முடிவெடுத்தோம். நான் பயணங்களில் முக்கியமாக கற்றுக்கொண்ட விஷயம் என்னவெனில் நல்ல சாப்பாடு கிடைத்தால் அது போன ஜென்மத்தில் நான் செய்த புண்ணியம், உணவக விஷயங்களில் கூகுளை நம்பி நிறைய மண்டை காய்ந்திருக்கிறேன், எனவே இரண்டு வேலைக்கான உணவாவது எடுத்து கொண்டு கிளம்புவதே புத்திசாலித்தனமான காரியம்.

  கோவையில் இருந்து சுமார் 200 கிலோ மீட்டர் தூரமுள்ள போர்ட் கொச்சிக்கு சொந்த வண்டியில் செல்வது உத்தமம், விலை குறைவான நல்ல வசதி கொண்ட விடுதிகள் முன்னரே பதிவு செய்து விடுங்கள். உதாரணமாக இந்த பிரேம்ஸ் ஹோம்ஸ்டே வெகு சிறப்பு. AC அறையே 1600 ரூபாய்தான் வருகிறது, 800 ரூபாயில் இருந்தே விலை ஆரம்பிக்கிறது, குடும்பம் எனில் யோசிக்காமல் அறை பதிவு செய்யலாம்.

வரும் வழியில் கடலுக்கு நடுவில் பாலம் அமைத்து பாதை செய்திருப்பார்கள், இரண்டு பக்கமும் நீர் சூழ கப்பல்களை பார்த்தபடி அந்த பாதையை கடப்பது வெகு அழகாக இருக்கும். ரோபோட் போல சிறிய ரக உளவு விமானங்கள் மேலே பறக்கும் வாயை பிளந்தபடி பார்த்தவாறு போகலாம். பகல் பதினோரு மணிக்குள் அங்கே சென்று விடுங்கள்,  அறையில் சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு மதிய உணவை முடித்துக் கொண்டு, மூன்று கிலோ மீட்டருக்கு உள்ளேயே எல்லா சுற்றுலா தளங்களும் அடங்கி விடுவதால் அவற்றை விசாரித்து ஐந்து மணிக்குள் முடித்துக்கொண்டு, போர்ட் கொச்சி வந்துவிடுங்கள் வழியெங்கும் வெளிநாட்டு ஜோடிகளும், நம்ம ஊர் (கேரளா நாட்டிளம் பெண்கள்) மேல் சட்டையை மட்டும் உடையாய் போட்டுகொண்டு வலம்வரும் அறிய காட்சியை காணலாம்.
  குழந்தைகள் விளையாட கடலுக்கு அருகே ஒரு பார்க் உள்ளது, சுற்றிலும் கைவினை பொருட்கள், உணவு கடைகள், ஓவிய, இசைக் கருவி விற்பனை நிலையங்கள் என வெளிநாட்டு கலாச்சார அழகில் கடைகள் நிறைந்திருக்கும்... வண்ண ஓவியங்கள், அலங்கார பொருட்கள் என கடைகளை அட்டகாசமாக வைத்திருக்கிறார்கள். பொருட்களை அங்கே பார்த்துக் கொள்ளுங்கள், வாங்க வேண்டிய இடம் பற்றி அடுத்தது எழுதுகிறேன்.

கடலில் கால் நனைக்கலாம், குளிக்க அனுமதிப்பதில்லை, ஆதலால் சூரியன் மறையும் வரை நல்ல ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து கொஞ்சம் கொஞ்சமாக மறையும் சூரியனின் அழகையும், பிரம்மாண்டமான நகரும் கப்பல்களையும் ரசிக்கலாம்.

இரவு உணவிற்கு அங்கிருந்து நான்கு கிலோ மீட்டர் தள்ளி கிருஷ்ணா போன்ற சைவ உணவகங்களும், முஸ்லீம் பீப் பிரியாணி ஹோட்டல்களும் உண்டு, கட்டுப்படியாகிற விலையில் ஓரளவு நல்ல சுவையுடன் கிடைக்கின்றன.
குடிகாரர்கள் ஒன்பது மணிக்கு முன்பே சரக்கு வாங்கி வைத்து விடுங்கள், நமது ஊர் போல ப்ளாக்கில் கிடைக்காது.

 அடுத்தநாள் காலையில் சிரமம் பார்க்காமல் நாலு மணிக்கு எழுந்து முப்பது கிலோ மீட்டர் தூரமுள்ள செராய் பீச்சுக்கு (ஒரு மணிநேரம்) வந்து விடுங்கள், மூன்று, நான்கு மணி நேரம் கடலில் விளையாடலாம். பக்கத்தில் போட்டிங் போக ஒரு மணிநேரத்துக்கு ஆயிரம் என அழைப்பார்கள் அது சிறப்பில்லை, வேண்டாம்.
 காலை உணவை வரும் வழியில் புட்டு, ஆப்பம், கடலை கறி, அல்லது முட்டை கறி கிடைக்கும் சிறிய உணவகங்களில் கூட நம்பி செல்லலாம், அது கேரள நாட்டின் தேசிய உணவு.

அறை காலி செய்யும் நேரத்தை தெரிந்து கொண்டு அதற்க்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே செராய் பீசிலிருந்து புறப்படுங்கள். காலி செய்த பின், மதிய உணவை வழியில் முடித்துக்கொண்டு (சாப்பாடு வேண்டாம், கொட்டை அரிசி மட்டுமே கிடைக்கும், வேறு ஏதாவது முயற்சி செய்யுங்கள்) எர்ணாகுளம் வந்து விடுங்கள்.

அங்கே மார்க்கெட் ஜெட்டி உண்டு, அவை முழுக்க லோக்கல் கடைகளால் நிரம்பி வழிந்திருக்கும், பேரம் பேசி வாங்கலாம். அதை முடித்து விட்டு அதன் எதிரிலேயே Boating point Marine drive உண்டு, தலைக்கு நூறு ரூபாய் டிக்கெட் குழந்தைகளுக்கு இலவசம், ஒரு மணிநேரம் கடலுக்குள் சுற்றி காட்டுவார்கள், தனி தீவுகள், கடலோரம் அமைந்திருக்கும் மிகப் பெரிய அப்பார்ட்மெண்ட்கள் என கண்டு மகிழலாம்.
 முடித்த பின் கொச்சியில் உள்ள இந்தியாவிலேயே பெரிய ஷாப்பிங்  மாலான லூலுவை பார்க்கலாம். கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் சுற்றியும் முழுவதும் பார்த்து முடிக்க இயலவில்லை.
இரண்டு நாட்களுக்கான கேரள சுற்றுலா திட்டம் இத்துடன் நிறைவடைகிறது.



Tuesday, March 20, 2018

ஊழல் - உளவு - அரசியல்


அதிகாரவர்க்கத்துடன் ஒரு சாமானியனின் போராட்டம்.
கதையை மிஞ்சும் நிஜம். கற்பனைக்கும் எட்டாத சாகசம். உயிரோட்டமுள்ள ஓர் அசாதாரணமான ஆவணம்.
(அட்டைப்பக்கத்தில் எழுதப்பட்டிருந்த வாசகங்கள்) 

ஒவ்வொரு வாசகனையும் அது எந்தளவுக்கு புரட்டிப்போடப்போகின்றது என்பதற்கான எச்சரிக்கைக்காகவே அவை எழுதப்பட்டிருக்கக்கூடும். 

வணிகம் சார்ந்து என்னத்தையாவது எழுதிவிடவேண்டும் என அல்லாமல் எந்தவொரு அலங்காரப் புனைவுகளுமின்றி முழுக்க முழுக்க அதன் இயல்பிலேயே ஒன்றி உயிரோடும் வார்த்தைகளைக் கோர்த்து உருவாக்கப்பட்டிருக்கின்றது இந்நூல். சாமானியன் ஒருவனாய் இருந்து ஊழலால் கரைப்படிந்திருக்கும் அரசு இயந்திரத்தை அசைத்துப் பார்க்க துணிந்தபோது தன்னை அடிபணியவைக்க எடுக்கப்பட்ட சித்திரவதைகளிலிருந்து சூழ்ச்சிகளிலிருந்து தப்பிக்க தானெடுத்த முயற்சிகளில் எவ்வாறு இறுதியில் வெற்றி அடைந்தார் என்பதைப்பற்றி பேசுகின்ற ஓர் உண்மைக்கதை. வஞ்சனையால் புதைக்கப்பட இருந்த அரும்பெரும் தன் வரலாற்றை தனியொருவனாகவே நின்று சுயமாக போராடி மீட்டுருவாக்கி வென்று காட்டிய‌ வகையில் இந்த படைப்பு நமக்கு கிடைத்திருக்கிற ஒரு அரிய பொக்கிசம்.

ஒரே இரவில் இந்நூலைப் படித்துமுடித்தேன். அந்தளவிற்கு எழுத்தாளர் இந்தப்புத்தகத்தில் தன் எழுத்துக்களால் வாசகனோடு உரையாடுகின்றார். பேசுகின்றார். உற்சாகமூட்டுகின்றார். சிரிக்கவைக்கின்றார். அழுகின்றார். அழவைக்கின்றார். எங்கெங்கோ அவர்கடந்த பாதைகளில் வாசகனின் கைப்பிடித்து கூட்டிச்செல்கின்றார். பயணிக்கவைக்கின்றார். கற்பிக்கின்றார். சிந்திக்க வைக்கின்றார். உறவாடுகின்றார். இப்படியாக வாசகனின் அசைவுகளைக் கட்டிப் போடுகின்றார். எந்த இடத்திலும் சலிப்பு தட்டவேயில்லை. அவரைப்போலவே சுறுசுறுப்பாகவும் விறுவிறுப்பாகவும் அவரது எழுத்துகளும் நம்மைப்பயணிக்க வைக்கின்றன. 

சாதாரணக்குடும்பத்தில் பிறந்த சங்கர், தனது தந்தை அவரது அரசுப்பணிக்காலத்திலேயே திடீர் மறைவடைந்ததால் அதன்வழி கிடைத்த அரசுப்பணியில், தன் பள்ளிப்படிப்பை முடித்தக்கையோடு தனது பதினாறு வயதிலேயே சேர்கிறார். ஆழ்ந்த சிந்தனையும், தொடர்ந்த வாசிப்பும், அயராத உழைப்பும் கொண்டிருந்தமையால் நாளும் சிறப்படைந்து வருகின்றார். ஆரம்பத்தில் பெரியாரியம், அதைத்தொடர்ந்து இடதுசாரிய கொள்கைகளால் ஈர்க்கப்படுகின்றார். 

கலைஞர் கருணாநிதியின் அரசியல், ஆட்சி நிர்வாகம், மக்கள் நலப்பணிகள் பலசெய்திட்ட திமுகவின் பொற்காலம் தொடங்கி அலைக்கற்றை ஊழல் நடந்த திமுகவின் கெட்ட காலம் வரையிலும் பிறகு ஜெயலலிதாவின் அரசியல் பிரவேசம் தொடங்கி முதல்வரான பின் அவராடிய ஆட்டங்கள், ஊழல்கள், கீழான அரசியல் ஆட்சி நிர்வாகம் தொடங்கி திமுக காலத்தில் தம்மீதும் தம்மைச்சார்ந்தோர் மீதும் போடப்பட்ட பல்வேறு ஊழல் சார்ந்த வழக்குகளை மூட அவர் காட்டிய ஆர்வம், லஞ்ச ஒழிப்புத்துறையில் இல்லாத நடைமுறையில் ஊழல் பின்னணி கொண்ட தமக்கு வேண்டியவர்களை நிர்வாகிகளாக அமைத்து தமக்கு வேண்டியதை செய்துக்கொள்ளும் அடாவடியான ஆளுமை வரையிலும் நடந்தவற்றை உள்ளதை உள்ளபடி பட்டியலிடுகின்றார். இதுவரை நான் எனதளவில் கொண்டிருந்த ஜெயலலிதா எனும் ஆளுமையின் பிம்பம் சுக்குநூறாய் போனது. 

அடுத்ததாக அண்ணாபல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பில் சேர்வதற்கு முதல்வர் ஒதுக்கீட்டு முறையில் ஒதுக்கப்பட்ட இடங்களைவிட அநேக இடங்களில் அமைச்சர்கள் சிபாரிசோடு அரசு உயர்நிலை அதிகாரிகளின் பிள்ளைகள் உட்பட மதிப்பெண்கள் குறைவாக எடுத்திருந்தவர்களுக்கு இடங்களை ஒதுக்கப்பட்டிருந்தது. பலகாலமாக இதுபோன்ற அராஜகங்கள் நடந்துவந்தாலும் அரசு ஊழியர்கள் தானுண்டு தன்வேலையுண்டு என்று இருக்கும் ஒரே காரணத்தினால் தான் இதுபோன்ற ஊழல்கள் நடக்கின்றன என்று வருத்தப்படுவதோடு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாய் தன்னையே களத்தில் இறக்கி செயல்படுகின்றார். அதன் பயனாய் பல முயற்சிகளுக்குப் பிறகு இறுதியில் உச்சநீதிமன்றம் அத்தகைய ஒதுக்கீட்டு முறையை நீக்குகின்றது. இது பெரிய சாதனை அல்லவா. இதுபோன்று பல இடங்களில் தன் கண்ணுக்கு முன்னால் நடக்கின்ற அநீதிகளை தன் பலத்திற்கு உட்பட்டோ மீறியோ காரியத்தில் இறங்கி சாதித்திருக்கிறார். 

கிட்டத்தட்ட பதினேழு ஆண்டுகளுக்கும் மேலாக அரசுப்பணியில் வேலையில் இருந்த சங்கருக்கு தன் தலையெழுத்தையே மாற்றப்போகும் அளவிற்கான சிக்கல் உண்டாகின்றது. தொலைப்பேசி ஒட்டுக்கேட்பு வழக்கில் சந்தேகத்தின் பேரில் விசாரிக்கப்பட்டு கைது செய்யப்பட்டு சிறைக்குச் செல்கின்றார். சிறைத்துறையிலும் நீதித்துறையிலும் நடந்த (நடக்கின்ற) அநீதிகளைச் சொல்லிச் செல்கின்றார். 

சிறைவாசத்தில் பெற்ற அனுபவத்தை நிறையவே பகிர்ந்திருக்கின்றார். பீடிக்கட்டுகள்தான் சிறைக்குள் பணமாகி இருப்பதைப்பற்றியும் விவரிக்கின்றார். சிறை நிர்வாகத்தில் நடக்கும் ஊழலைப்பற்றியும் அரசியலைப்பற்றியும் சொல்கின்றார். பணவசதி இல்லாதவர்கள் ஜாமீனில் வெளிவரமுடியாமல் இருக்கும் ஏனையோர்கள், தங்கள் குற்றத்திற்கு தண்டனைக் கிடைத்தாலும் கிடைக்கக்கூடிய காலத்திற்கும் அதிகமாய் விசாரணை என்ற போர்வையில் விசாரணை நீட்டிக்கப்பட்டு அநியாயமாய் சிறையில் தண்டிக்கப்படுவதை அடிக்கோடிட்டு காண்பிக்கின்றார். பின்னாளில் ஜாமீனில் வெளிவந்தபிறகு சிறையில் சந்தித்த இசுலாமிய நண்பர் ஒருவருக்கு வழக்கிலிருந்து வெளிவர அவரது உண்மைத்தன்மையை ஆராய்ந்து வைத்து, தன்னால் முடிந்தவரை உதவிசெய்ய முயன்று, செயலை முடுக்கிவிட்டு அதில் வெற்றியும் அடைகின்றார். 

நீதித்துறையில் வெளிப்படையாக பார்க்கும் பொழுது எல்லாம் சரியான முறையில் நடப்பது போன்று தோன்றுவது மாயை என்றதோடு அங்கு உள்ளே நடக்கின்ற அவலங்களை தோலுரிக்கின்றார். அரசியல் காரணமாக ஒரு வழக்கை எத்தனை நீதிபதிகள் விசாரிக்கின்றனர் என்பதும், ஒரு வழக்கின் விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கவிருக்கும் வேளையில் நீதிபதி மாற்றப்படும் மோசடி நடப்பதையும் ஒவ்வொன்றாக வரிசைப்படுத்திச் சொல்கின்றார்.

ஒருமுறை நீதிமன்ற அறையைவிட்டு வெளிவரும் பொழுது தன்மேல் கொண்ட ஆத்திரம் மற்றும் விரக்தியால் பொய் புனைவுகளோடு குற்றம்சாட்டிய அதே டிஎஸ்பி பாலு நிற்கின்றார். அப்போது சங்கர் அவரருகில் சென்று 'என்ன பாலு, எப்படி இருக்க?' என்று கேட்கும்பொழுது அட்டகாசம். (ஒரு பி.ஜி.எம் பின்னால ஓட விட்டுருந்தமாதிரி இருந்துச்சு.)

கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகளாக இவரது வழக்கும் நடக்கின்றது. தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், மீண்டும் தர்மமே வெல்லும் என்னும் முதுமொழிக்கேற்ப, ஆரம்ப காலத்தில் அதிகாரிகளால் இவர்மீது பொய்யாக சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அடங்கிய குற்றப்பத்திரிக்கையின் மீது இறுதிக்கட்ட குறுக்குவிசாரணையில் சில சாட்சியங்கள் இறந்தும் பல சாட்சியங்கள் முன்பு பொய் சொல்லிவிட்டு பின்னர் பிறழ் சாட்சியங்களாய் மாறின. பல போராட்டங்களின் விடியலாய் ஓர்நாள், சாட்டப்பட்ட அத்தனை குற்றச்சாட்டுக்களிலும் இருந்து சங்கர் விடுவிக்கப்பட்டு விடுதலை செய்யப்படுகின்றார். 

சங்கர் அவர்களின் வாழ்வில் பல இடங்களில் முக்கிய திருப்புமுனையாக அமைந்து, அவருக்கு பலவழிகளில் உதவி செய்திட்ட மனிதர்களை பட்டியலிட விரும்புகின்றேன். பேராசிரியர் கல்யாணி, எஸ்.பி. அருண், நண்பர் ராஜசேகர், முக்கியமாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி உபத்யாய், வழக்கறிஞர் புகழேந்தி, டெகல்கா சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் மணிகண்டன், மற்ரும் இறுதி குறுக்கு விசாரணையின் வழக்கறிஞர் ரமேஷ் ஆகியோர்களை போற்றுகின்றேன். 

இப்படியாக ஒவ்வொருவரும் ஒரு துரும்பை எடுத்துப் போட்டதால்தான் தம்மால் முதலைகள் நிறைந்த ஒரு குளத்தில் நீந்திக் கரையேற முடிந்திருக்கிறது என்று சொல்லுவதோடு, இதுவரை பட்டதற்கு வருத்தப்படவில்லை மாறாக பெருமைப்படுவதாகவும் எழுத்தாளர் சொல்லி முடிக்கின்றார். 

சங்கர் அண்ணனுக்கு என் வாழ்த்துகளும் நன்றிகளும். 

இதுபோன்று நிறைய சங்கர்கள் மறைந்து வாழ்ந்தும் வரலாம். பிரச்சினைகளில் சிக்குண்டும் இருக்கலாம். சமூகத்திற்கு உதவ நினைத்து தன் நலன்களை இழந்தும் நிற்கலாம். தயவு செய்து உங்கள் கண்முன்னால் அப்படி யாரேனும் இருந்தால் தோள் கொடுத்து அவர்களை நிமிரச்செய்யுங்கள். அவர்கள் தண்டிக்கப்படுவதற்கு வடிகாலாய் மட்டும் அமைந்துவிடாதீர்கள். நீங்களும் அரசு வேலைப்பார்ப்பவராய் இருந்தால் மறைமுகமாகவாவது உங்களால் முடிந்த அளவிற்கு வேண்டிய உதவியை செய்ய முன்வாருங்கள். நமக்கு சங்கங்களை விட இப்போது நிறைய சங்கர்கள் தான் அவசியமும் தேவையும் கூட. 

இதுவே சவுக்கு சங்கர் நம்மிடம் இருந்து எதிர்பார்ப்பார் என்பது எனது அனுமானம். 

நன்றி
அங்குராசன். (https://www.goodreads.com)
23-02-2017