Tuesday, June 20, 2017

அனலோன் கவிதைகள்

சமீபத்தைய கவிதைகளில் அனலோன் கவிதைகள் வித்தியாசமாகவும், மனதுக்கு மிக நெருக்கமாகவும் இருக்கிறது. கவிதை உலகில் தனக்கென தனி இடம் பிடிக்க வாய்ப்பும் இருக்கிறது  அவர் எழுத்துக்கள் கூடிய விரைவில் புத்தக வடிவில் வர வாழ்த்துக்கள்.

அவரின் கவிதைகள் சில

மரணம் கொள்ளும் பயணம்


செங்கேழ் மேனி தொட்டு
சிறிததிர்ந்து
விலகி
பின்னரும்  விண்ணில் மீண்டெழ
முயல்கிறது
சிறுபறவை உதிர்த்த இறகொன்று...!!

மரணித்த பின்னும்
தன் பயணம் தன்னை
கொண்டாடித் தீர்க்கிறது
நெடுமரம் உதிர்த்த சருகொன்று...!!


நீள்நதி அலையில்
மௌனமாய் பயணிக்கிறது
செஞ்சாந்து தீற்றல் களைந்து,
கரையோர காட்டு அய்யனார்
சூடிய மாலையொன்று..!!

காட்டையாண்ட
பெருஞ்சிறுத்தை காலம் கொண்டு
வீழ்ந்திறக்க,
பருவுடல் தன்னை
பகிர்ந்து நகட்டிச்செல்கிறது
சிற்றெறும்புக்   கூட்டமொன்று..!!
--------------------------------------------------

அப்பாயி...
எனக்கொரு ஆசை..!!


ஏனோ இன்றுன்னை எண்ணத் தோன்றியது..
எங்கோ ஆழ்மனதின் அடியாழத்தில்
நீ இரவு முழுவதும் வீசிய
ஓலைகாற்று அலைபாய்ந்துகொண்டிருக்கிறது..!!


இருளேறிய மண்வீடு..
பனை உத்திரங்களும் ஓலைக்கூரையையும்
பார்த்தபடி கிடந்துறங்கிய நினைவுகள்
படிமங்களாக உறைந்து கிடக்கிறது..!!


மின்சாரம் இல்லாத
அந்நாட்களில் சிம்னி விளக்கில்
புளிக்குழம்பும்,
கரண்டி முட்டையும்
இந்த 35 வருடங்களில் கிடைக்கவில்லை தாயே..!

அரிக்கேன் வெளிச்சத்தில்
கால் நீட்டி நீ அமர்ந்து, நிலவுபாட்டியாய்
மண்சுவரில் உன் நீண்ட பெருநிழல் விழுந்து
புரியாத மொழியில் பாடிய தாலாட்டில்
லயித்துக்கிடந்த சிறுவயதுப்பிராயம்
திரும்பாது எனிலும்,
காலங்கடந்தும் நெஞ்சில் நிக்குதம்மா..!!

டயர் செருப்பு அணிந்திருப்பாய் ..
பனைவெல்லம் காய்ச்சுகையில்
பதமாய் ..
சிறு குச்சி நீட்டி சவ்வுமிட்டாய் எடுத்து தருவாய்..!!

பொன்னாங்கண்ணி கண்மாயில்
பனைஓலை வெட்டி
கருவேல முள் தைத்து காத்தாடி செய்து கொடுப்பாய்..!!
ஐந்து கண் நுங்கெடுத்து பனைவண்டி
எனக்களித்தாய்..!!

என்ன தருவேன் நான் உனக்கு ஏங்கி ஏங்கி உன்னை நினைப்பதைத் தவிர..?
அப்பாயி..
எனக்கொரு ஆசை...
நிறைவேற்றுவாயா ..??

எனக்கான தீர்ப்பு நாள் தாண்டி
விண்ணேகி நான் வருகையில்
நின்மடியில் படுத்து
ஓலைக்காற்றை சுவாசிக்க வேண்டுமம்மா..!!

உன் கண்டாங்கி சேலை நுனி
நான்பற்றி
கண்துயில வேண்டுமம்மா..!!
-----------------------------------------------------------
நினைவேந்தல்

பலநாள் முன்பு
அகால மரணமடைந்த
நண்பனுடைய  பிறந்தநாளின்
முகநூல்  நினைவுறுத்தல்
குறுஞ்செய்தி
கண்டு
ஒரு கணம்
திகைத்து அடங்கியது உள்ளம்..!!


குழந்தைப் பலி கொண்ட
வீட்டின்
உத்திரத்தில்
கட்டிய தொட்டிலின்
கயிற்றுத் தடம் உடனே
மறைவதில்லை..!!


அய்யம்மாள் கிழவி
தனித்து வாழ்ந்து
மரித்துப்போன சிலவருடம் பின்னும்
பாக்குடைப்பான்
திண்ணையிலேயே இருந்தது..!!


தொழுவம் கட்டிய
லட்சுமியின் கழுத்துச் சலங்கை
கோமாரி கண்டு செத்த பின்னும்
அவ்வப்போது காற்றில் சலசலத்து
அவளை நினைவுறுத்தும்..!!
----------------------------------------------

ஆதியில் ஆப்பிள்...



காது மடல் நுனி...
கழுத்துப்புறம் ஏதோ ஊர… ,

கண்ணெதிரில் நட்சத்திரங்கள்… !
கால்கள் பின்னி
ஊர்ந்த கைகளுக்கிடையே
சிக்கித்தவித்தது வெட்கம்… !
படர்கையில் பாதிதேகம்
நிலைக்கண்ணாடியில்…,
தோன்றி விலக,
மறைந்து சிரித்தது வெட்கம்…!
பின்னிரவுப்பறவையொன்று
ஜன்னல் வழிபார்த்து
சீட்டியடித்தது….. !



மயக்கம் பாதி, தயக்கம் மீதி…
முடிவில் முதலாவது ஜெயிக்க,
தயக்கமும், வெட்கமும்…
கட்டில் நுனியில்… !



தேக அணுக்கள்ஒன்றாகக் குவிந்து,
பின்..ஒவ்வொன்றாய் பிரிய…
வியர்வைத்துளியில்,
கழுவப்பட்டது நாணமும் , தயக்கமும்…. !
புரியாத புதிராய்புதிதாய்த்
தொடங்கத் தொடங்க,புரியாதவை
புலப்படலாயின…!


இருபது வருடங்களாய்
பூட்டிவைத்தபொக்கிஷங்கள்
கொள்ளையிடப்பட்டும்,வாரி வழங்கிய திருப்தியும்,
மிதமிஞ்சிய உணவுண்ட திருப்தியும்,
உண்டாயின…. !
மூச்சூக்காற்றும் வெப்பமாக,
வியர்வையில் தேகம் தெப்பமாக…!


களைத்து விலகும் போது
காதல் மட்டும் பிரவாகமாய்ப்பொங்கும்….. !
வாழ்க…… !
ஆதியில் ஆப்பிள் கடித்தவன்…. !
-------------------------------------------------
உன் சிலநிமிட காத்திருப்புகள்...


நீயின்றி நான் கடக்கும்
சோலையில் உணர்ந்தேன்
பாலையின் வெப்பத்தை…!!

உனதுமழைத்தாகம் தெரிந்தோ என்னவோ,
நாமில்லா சமயங்களில்
பெய்வதில்லை மழை …!!

உனக்குத் தெரியுமா உன் உச்சந்தலை
தொட்டமுதல் மழைத்துளிஎதுவென…… ?!!!

நீ காத்திருக்கும் நிறுத்தத்தில் நீண்டநேரம் என் பேருந்து நிற்பதாய்
எனக்குள் பிரமை… !!!

காத்திருப்புகளும்,
சில நொடி கவனிப்புகளுந்தான் காதலின் சொர்க்கம்...

உனக்கான ...பூக்கள் வாங்கிய
கடைக்காரன் ஏளனமாய்ப்
பார்க்கிறான் இன்று……

உனது மறுதலிப்பு
அவனுக்குத் தெரிந்திருக்க
வாய்ப்பில்லை…! எனக்கான

உன் சிலநிமிட காத்திருப்புகள்
என்னுள் ஏற்படுத்திய
அதிர்வுகள் பல…! இன்று நீ
எனக்காகக் காத்திருப்பதில்லை…!

இருந்தாலும் ,
நான்தவறவிட்ட
சில நிமிடங்கள் தான்,
எனக்குத் தரப்பட்ட அவகாசங்கள்
என்பதை நான்உணரவில்லை……!

நாம் ஏன் மீண்டும் பிறக்கக் கூடாது…….
நமக்கான ,
நமது காதலைப்புரிந்து
கொள்ள….?!!!
-------------------------------------
வாட்ஸ்அப் வழி பகிர்ந்த செந்தில்குமாருக்கு நன்றி.  

No comments:

Post a Comment