Wednesday, February 8, 2017

பணம் இருந்தா பத்து ரூவா குடு

நெடுநெடுவென வளர்ந்திருக்கும், பஞ்சாயத்துபடிகளில் மெளனமாக அமர்ந்திருக்கும், சிலசமயம் கூச்சல் இட்டபடி தெருவில் ஓடும், வலிய சென்று வண்டிகளில் பாரம் இறக்கிவிட்டு விடுவிடுவென நடந்து வந்து அதே படிகளில் அமர்ந்து கொள்ளும், சில சமயம் என்னை பார்த்து சிரிக்கும், 'சொல்லுங்கள் ராஜாவே', என்றால் வெட்கப்பட்டு தலை குனிந்துகொள்ளும்.

   மாதத்தில் ஏதாவது ஒரு நாள் தலையை தாழ்த்தியபடி "பத்து ரூபா கொடு", என்று வரும். "ஏன் சாப்பிடலயா?", என்றால் எவனுமே தர மாட்டேங்கிறான் என்று சொல்லும். "எங்கிட்ட கேட்க வேண்டியதுதானே?" என்றால் "பத்து ரூபா கொடு" என்று மீண்டும் தொடங்கும். காசை வாங்கியவுடன் வேகமாக கடைக்கு சென்றுவிடும்,  ஏதாவது சாப்பிட வாங்கி அதே படிகளில் அமர்ந்து கொள்ளும்.

 முழு சுயநலம் கொண்டுதான் அவரிடம் நட்பாக இருக்கிறேன், என்னையும் அந்த படிகளில் காலம் அமர்த்த கூடும், அப்போது உங்களுக்கு என்னைப் பற்றி யாராவது இப்படி எழுதிக் கொண்டிருப்பார்கள்... இல்லையா?     

Wednesday, February 1, 2017

செங்"குட்டுவன்"

தேனி மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு மாதமும் நான்காவது வெள்ளிக்கிழமை விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, இன்று நடைபெற்ற கூட்டத்தில் செங்குட்டுவன் என்ற விவசாயி போட்ட கணக்கில் மாவட்ட ஆட்சியருக்கு தலைசுற்றியது. இதையடுத்து அவரால் பதில் எதுவும் பேசமுடியாமல், சிரித்து மழுப்பி விவசாயியிடமிருந்து தப்பிச் சென்றார்.
விவசாயின் பட்டியல்
1970 ஆண்டுகளில்..
எம்.எல்.ஏ. சம்பளம் - ரூ.150
பேங்க் மானேஜர் - ரூ.250
ஆசிரியர் சம்பளம் - ரூ..90
60 கிலோ நெல் மூடைக்கு - ரூ.40
கரும்பு டன் ஒன்றுக்கு - ரூ.90
ஆனால் இன்று..
எம்.எல்.ஏ. சம்பளம் - ரூ.55,000
பேங்க் மானேஜர் - ரூ.66,000
ஆசிரியர் சம்பளம் - ரூ.39,000
60 கிலோ நெல் மூடைக்கு - ரூ.880
கரும்பு டன் ஒன்றுக்கு - ரூ.2850
மத்திய அரசு 7-வது ஊதியக்குழு மூலம் அரசு ஊழியர்களுக்கு சம்பளத்தை அதிகரித்துள்ளது. அதேபோல், விவசாயிகளுக்கு இந்த விகிதாச்சார அடிப்படையில் கரும்பு டன்னுக்கு ரூ.39 ஆயிரமும், 60 கிலோ நெல் மூடைக்கு ரூ.18 ஆயிரமும் வழங்க வேண்டும் என்று விவசாயி செங்குட்டுவன் வலியுறுத்தினார். இல்லையெனில், கரும்பு ஆலையில் பங்குதாரராக சேர்த்துக்கொள்ளவேண்டும் என்ற மாற்று யோசனையையும் மாவட்ட ஆட்சியரிடம் முன்மொழிந்தார்.
Karuna Murthy fb