Tuesday, January 31, 2017

விக்ரமாதித்யன் கவிதைகள்

கூண்டுப் புலிகள்

நன்றாகவே பழகிவிட்டன
நாற்றக் கூண்டு வாசத்துக்கு
பெரிதாக ஒன்றும் புகார் இல்லை
நேரத்துக்கு இரை
காலமறிந்து சேர்த்து விடப்படும் ஜோடி
குட்டி போட சுதந்திரம் உண்டு
தூக்க சுகத்துக்கு தடையில்லை
கோபம் வந்தால்
கூண்டுக் கம்பிகளில் அறைந்து கொள்ளலாம்
சுற்றிச் சுற்றி வருவதும்
குற்றமே இல்லை
உறுமுவதற்கு உரிமையிருக்கிறது
முகம் சுழிக்காமல்
வித்தை காண்பித்தால் போதும்
சவுக்குச் சொடுக்குக்குப் பயந்து
நடந்து கொண்டால் சமர்த்து
ஆதியில் ஒரு நாள்
அடர்ந்த பசியக்காட்டில்
திரிந்து கொண்டிருந்தனவாம்
இந்தக் கூண்டுப் புலிகள்


நீலகண்டம்

அவனுக்குத் தெரியாதா
ஆலகால விஷம்
அவளேன் அலறிப் புடைத்து ஓடிவந்து
அவன் சங்கைப் பிடித்தாள்
கறுத்த கழுத்து
காமத் தழும்பு!


நகரம்

விரும்புவது
நதிக்கரை நாகரிகம்
விதிக்கப்பட்டது
நெரிசல் மிக்க நகரம்


வாழ்க்கை

அவர்கள்
பேசுவது பகவத்கீதை
பின்னால் இருக்கிறது
பாதுகாப்பான வாழ்க்கை


Wednesday, January 25, 2017

ஒரு நீதிக்கதை

புத்தர் ஒரு நாள் தன் கையில் பூவுடன் வந்தார். அவர் ஒரு ஆன்மீக சொற்பொழிவு கொடுக்கவேண்டும், ஆனால் அவர் மௌனமாக இருந்தார். 

அவர் சொல்வதைக் கேட்க வந்தவர்களுக்கெல்லாம், அவர் என்ன செய்கிறார் என்பது குறித்து ஆச்சரியம் அடைந்தார்கள். 
நேரம் கடக்கிறது. இவர் பேசப்போகிறாரா, இல்லையா ? என்று வியந்தார்கள்.

ஒருவர் கேட்டார்  நாங்கள் எல்லோரும் நீங்கள் பேசுவதை கேட்பதற்காக வந்திருக்கிறோம் என்பதை மறந்துவிட்டீர்களா ? “.

புத்தர் நான் வார்த்தைகளால் சொல்லமுடியாத சிலவற்றைச் சொன்னேன். 

உங்களுக்கு கேட்டதா, இல்லையா ? “.


முற்றிலும் அறிமுகம் இல்லாத மகாகாஷ்யபா என்ற சிஷ்யர்
 மனதார சிரித்தார். 

புத்தர் அவரைப் பார்த்து மகாகாஷ்யபா என்னால் எதையெல்லாம் வார்த்தைகளின் மூலம் கொடுக்க முடிந்ததோ, அதையெல்லாம் நான் எல்லோருக்கும் கொடுத்துவிட்டேன், என்னால் வார்த்தைகளால் கொடுக்கமுடியாத, சில உண்மையான, அர்த்தமுள்ளவைகளை நான் மகாகாஷ்யபாவிற்கு கொடுத்தேன் என்றார்.

அதனால் சென் (Zen) பாரம்பரியம் திரும்பக் கேட்டுக்கொண்டே இருப்பது மகாகாஷ்யபா (Mahakshyapa) விற்கு எது செலுத்தப்பட்டது? ”– வார்த்தைகள் இல்லாமல் புத்தர் என்ன சொன்னார்? மகாகாஷ்யபா என்ன கேட்டார்?

பாங்கி(Bankei) என்ற ஒரு மாபெரும் சென் (Zen) ஆசிரியர், “புத்தர் ஒன்றும் சொல்லவுமில்லை, மகாகாஷ்யபா எதையும் கேட்கவுமில்லைஎன்றார்.

அதனால் யாரோ ஒருவர் கேட்டார் புத்தர் ஒன்றும் சொல்லவில்லையா ? ”.

ஆமாம், ஒன்றும் சொல்லப்படவில்லை, ஒன்றும் கேட்கப்படவில்லை. இது சொல்லப்பட்டதையும், கேட்கப்பட்டதையும் பார்த்த சாட்சி நான்என்றார் பாங்கி.

யாரோ ஒருவர் நீங்கள் அங்கு இல்லையே ? “ என்றார். அதற்கு பாங்கி நான் அங்கு இருந்திருக்கவேண்டிய அவசியம் இல்லை. எதுவும் சொல்லப்படாதபோது, யாரும் சாட்சியாக இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. நான் அங்கு இல்லை, ஆனாலும் நான் சாட்சியாக இருக்கிறேன்என்றார்.

வாழ்ந்து கொண்டிருக்கும் மின்சாரத்தை சொல்லித்தெரியப்படுத்த முடியாது. 
அது இருக்கிறது, அது உங்களுள் தான் இருக்கிறது. நீங்கள்தான் அந்த 
வாழ்ந்துக்கொண்டிருக்கும் மின்சாரம். ஆனால் நீங்கள் உள்ளே 
போனதேயில்லை. உங்கள் கவனம் முழுவதும், எப்போதும் வெளியிலேயே  
இருக்கிறது. நீங்கள் வெளிப்பக்கம் நோக்கி இருக்கிறீர்கள். அதில் நீங்கள் 
பொருத்தப்பட்டுவிட்டீர்கள். உங்கள் நோக்கு முற்றிலும் 
பொருத்தப்பட்டதாகிவிட்டது. அதனால் உங்களால் உள்ளே இருப்பது 
என்பதைப் பற்றி நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. அப்படியே நீங்கள் 
உள்ளே இருப்பதற்கு முயற்சித்தால்கூட, நீங்கள் கண்களை மூடிக் கொண்டு 
வெளிப்புறமாகவே தான் இருந்துக் கொண்டிருக்கிறீர்கள்.

 ஓஷோ எழுதிய "நான் ஒரு வாசல்", புத்தகத்தில் இருந்து

Friday, January 6, 2017

இரசனைகளின் தருணம்..... அமீர் அப்பாஸ்

நட்சத்திரங்களின்
ஒளிச்சொற்களால்
பூக்களின் இதழ்களில்
காற்றின் பாடல்களுக்கு
கையொப்பம் இட வந்தவன்
என்னை
கணிதப்பாடத்தை
மனனம் செய்யச்சொல்லி
கட்டாயப்படுத்தாதீர்கள்..!
கொட்டும் அருவிகளின்
வற்றாத ஜீவநதிகளின்
அடர்ந்த காட்டின்
பேரமைதியில்..
தனித்திருக்க வந்த
இயற்கையின்
யாசகன் நான்..!
என்னை
செல்வந்தர்களிடம்
கையேந்தி நிற்கச் சொல்லி
காயப்படுத்தாதீர்கள்..!
ஒரு பறவையைப் போல
பூமியை தரிசிக்க வந்த
யாத்ரீகன் நான்..!
குடும்பம், சாதி, மதம்
ஆகிய கூண்டுகளில்
சிறைப்பிடிக்க வேண்டி
என் சிறகுகளை
வெட்டி விடாதீர்கள்..!
என் வண்ணங்கள்
பிடிக்கவில்லை என்றால்
விலகிச் செல்லுங்கள்..!
உங்களின் சாயத்தை..
என் மீது பூசிச் செல்லாதீர்கள்..!
பெருமழைக் காத்திருக்கிறது
வண்ணங்கள் கலைந்திடும்
வாழ்க்கை ஒரு வானவில்..!
பூட்டி வைத்த..
ஆபரணங்களுக்காக
நீங்கள் விழித்திருங்கள்..!
ஒரு நாடோடியின்
இரசனை மிகுந்த
இராத்திரியைப் போல
மிஞ்சியிருக்கும்
இந்த வாழ்க்கை
எனக்குப் போதும்..!
மரணத்தின் வாழ்வை
தினமும் வாழ்பவன்..!
வாழ்வின் மரணத்தை
என் மீது
திணித்து விடாதீர்கள்..!
பயணிக்காத
கப்பலின் பாதுகாப்பு
எனக்கு வேண்டாம்..!
ஒரு புயலைக்
கடந்து செல்லும்
ஒரு கட்டு மரம் போல்
வாழ்வேன்..!
வேதங்களின்..
மந்திரச்சொற்களால்
சிறைவைக்கப்பட்ட
உங்கள் இறைவன்
எனக்கு வேண்டாம்..!
தாய்மையின் சிறகுகளாய்
கைகள் விரித்து
காத்திருக்கும்
காலத்தின் மடியில்
சரணடைவேன்..!
சுவடுகள்
ஏதுமின்றிக் கரையும்
ஒரு நொடி போதும்..!
கடலிற்குள்
காணாமல் போகும்
நதியாவேன்..!

Wednesday, January 4, 2017

சம்பவம்

துடியலூர் அருகே ஒரு ஆவின் பூத்தில் டீ குடிப்பதற்காக நின்றிருந்தேன், ஒரு போலீஸ் ஜீப்பில் இரண்டு போலீஸ்காரர்கள் அமர்ந்து கொண்டு, அதில் ஒருவர் அதட்டும் குரலில் "டீ போடுய்யா", என்றார்,

கடைக்காரர் என்னை மறந்துவிட்டு வேகமாக அவர்களுக்கு டீ போட்டு ஓடி சென்று கொடுத்தார், "சாரி சார்", என்று என்னை பார்த்து சிரித்துவிட்டு எனக்கும் அவசரமாக போட்டு கொடுத்தார், நான் போலீஸ்காரர்களை பார்த்தேன், அவர்களும் என்னை பார்த்து ஏதோ பேசிக்கொண்டது போல் தெரிந்தது.

காசை கொடுக்க பர்ஸ் எடுப்பதற்குள், ஒரு போலீஸ் வேகமாக இறங்கி வந்து டீக்கான காசை கொடுத்தார், கடைக்காரர் தலையை சொறிந்துகொண்டே "வேண்டாம்", என்றார், "குடுக்கலேன்னாலும் கேட்டு வாங்கனும்யா" என்றார் அதே அதட்டும் குரலில், போலீஸ் பற்றிய என் பிம்பம் உடைய ஆரம்பிக்கையில், "உங்களை எங்கையோ பார்த்த மாதிரி இருக்கே?"என்றதற்கு, "உங்கள மாதிரி காசு கொடுத்து டீ குடிக்கும் சாதாரணன்தான் நானும்" என்றேன்...

இருவரிடமும் ஏனோ மெல்லிய சிரிப்பு மலர்ந்தது.