Friday, December 29, 2017

*ஆண்டாளின் விசிறி *

ஆண்டாள் கோவில் 

இருட்பிரகாரத்தில் அப்பாயி

கை பிடித்து ஈரத்தரையில் 

மிதந்து சென்றது அவ்வப்போது 

கனவில் எழுகிறது..!!

கருஞ்சிலைகள் நோக்கி நிற்க 

பதட்டத்துடன் கடந்து சென்றிருக்கிறேன்..!

யானைச்சாண  வீச்சம் காற்றில் கலந்து வீச 

கருங்கல்  

எதிரொலி கேட்டபடிக்கு 

பயந்து கண்டாங்கி சேலைநுனியை 

இறுக்கி பிடித்தபடி கடந்திருக்கிறேன்..!

வாரச்சந்தாவில் சேர்த்து வைத்த ஐந்து பத்து 

ரூபாய்க்கும் வேட்டு வைக்க 

தகர இரயில்வண்டி வேண்டி 

தரையில் புரண்டு அழுதிருக்கிறேன்..!!

டயர் செருப்பு வார் அறுந்தும் 

காலணாவுக்கு 

தைக்காமல்   வெறுங்காலில், எனைச்சுமந்து       

கருவேல கண்மாய் கடந்து 

இரயில்வண்டியோடு சுடச்சுட 

வாழையிலை பால்கோவாவும் 

வாங்கித்தந்திருக்கிறாள்..!!

கரண்ட் வந்திருக்காத சிறுகிராமத்தின் 

இரவுகள் 

அவள் மாராப்பு விசிறிகளின்றி 

எனக்கு கடந்ததே இல்லை..!!

உணர்கிறேன்  நான் ...புற்று வந்து 

செத்துப்போன அப்பாயி அன்று என் 

கை பிடித்து அழைத்துச் சென்ற 

ஆண்டாளே தான் என..!!


*---அனலோன் *

Sunday, December 10, 2017

வயநாடு சுற்றுலா

கடந்த முறை  சென்ற போது மிக தவறாக திட்டமிட்டு ஏமாந்ததால் வயநாடு ஒரு மொக்கை சுற்றுலா பிரதேசம் என பதிவு செய்திருந்தேன்... மன்னிக்கவும்

 இந்த முறை வேண்டா வெறுப்பாக தான் ஆரம்பித்தேன், கோவையில் இருந்து ஊட்டி சென்று அங்கிருந்து வயநாடு போவதாய் இருந்த திட்டத்தை திம்பம் கர்நாடகா வழியாக செல்ல காலையில் முடிவெடுத்து நாலரை மணிக்கு ஆரம்பித்தேன்.

 ஐந்து மணிநேர இளையராஜா பாடல்களுடன் காரமடை, பவானிசாகர், பண்ணாரி வழியாக ஆரம்பித்தது பயணம், நல்ல ஓட்டுனருக்கு மலைப்பாதை வாகன செலுத்தல் சொர்க்கம், ஆனால் வெறும் 14 கிமீக்கு, 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட திம்பம் லாரிகளை வரிசையாக வர வைத்து சோதனை தருகிறது. காலை ஏழு மணிக்கும் திம்பம் விழிப்படைந்திருக்கவில்லை. மலை ஏற்றம் முடிந்தபின் வாகனசோதனை சாவடி அருகில் ஒரு சிறுகடை  உண்டு (அந்த சோதனைசாவடியில்தான் சிறுத்தை இரண்டு வனகாவலர்களையும், சில மலைவாழ்மக்களையும் கொன்றது உபரி தகவல்) சிறுதின்பண்டங்களை சுடச்சுட செய்து தருகிறார்கள், தேநீரும் உண்டு, நல்ல சுவை.

 அதை தாண்டி ஹாசனூருடன்  தமிழக எல்லை முடிவடைகிறது, படுகேவலமான கர்நாடக சாலை அங்கிருந்து ஆரம்பிக்கிறது, தமிழக சாலைகளை குறை சொல்லும் எனக்கு சரியான பாடத்தை புகட்டுகிறது கர்நாடகா.

இதில் ஒரு குழப்பம் என்னவெனில் தாளவாடி (வீரப்பன் ராஜ்குமாரை கடத்தி கொண்டு போன காட்டு பங்களா அங்கே இருக்கிறது) கர்நாடக எல்லைக்குள் வருகிறது ஆனால் அது தமிழ்நாட்டின் ஒரு பகுதி என்கிறார்கள்.

 காலை ஒன்பதுமணிக்கு கூட இருள் பிரியாத, மேகம் பொழியும், காரில் லைட் போட்டே ஓட்டும் நிலையிலும்,  காட்டுப் பன்றிகள், மயில்கள், மான்கள் (காரை தாண்டி குதித்து ஓடின), முயல்கள், முள்ளம்பன்றிகள் சர்வ சாதாரணமாக கண்ணில் படுகின்றன. சிலிர்ப்பும் ஆனந்தமும் பரவ வாகனத்தை மெதுவாகவே செலுத்துகிறேன்.
 தயவு செய்து அந்த வழியில் வருபவர்கள் பணம் கையிருப்பு வைத்திருங்கள், "atm என்றால் என்ன?" என அங்குள்ளவர்கள் கேட்கிறார்கள். சாம்ராஜ் நகரில் மட்டுமே atm வசதி உண்டு, அதுபோக பெரிய ஹோட்டல்களில், பெட்ரோல் பங்குகளில் கூட கார்டு உபயோகிக்க இயலவில்லை (அரே மோடி கியா கரே தும் டிஜிட்டல் இந்தியா)
 அங்கே ஒரு பெரிய ஹோட்டலில் ஏமாந்து போய் சாப்பிட்டேன், சாம்பார் ஒரே இனிப்பு, இட்லியில் கருவேப்பில்லை எல்லாம் போட்டு ஒரு விதமாக தருகிறார்கள், பூரி மசால் உருப்படியான உணவு, டீ பரவாயில்லை. செல்லும் வழியிலோ, சுற்றுலா தளங்களிலோ நல்ல உணவு கிடைத்தது எனில் நீங்கள் அதிஷ்டக்காரர்.
 குண்டல்பேட் தாண்டி பந்திப்பூர் வழியே சென்றால் கூட்டமாக யானைகள், அதைவிட அதிக கூட்டமாக மான்கள் வழியெங்கும் பரவசபடுத்துகின்றன. பத்து யானைகள் குட்டிகளோடு நிற்கும் இடத்தில்  அரைமணிநேரத்துக்கு மேல் நின்றிருந்தேன்.
 வயநாடு செல்ல பந்திப்பூர் பாதையில் செல்லுங்கள், அதுதான் சொர்க்கம்.
வயநாடு பற்றி நிறைய பதிவு வந்திருக்கும். நான் சுருக்கமாகவே முடிக்கிறேன்.

கல்பேட்டாவில் அறை பதிவு செய்யுங்கள், அங்கிருந்து சுற்றுலா தளங்கள் போய் வர வசதியாக இருக்கும்.

அசைவ உணவு விரும்பிகள் சிட்டி ஹோட்டல் விசாரித்து அங்கு சாப்பிடுங்கள், சைவம் எனில் அப்பாஸ், கட்டுப்படியாகும் விலை,  வயிற்றை அலற வைப்பதில்லை, சுவை சிறப்பு.

மூன்று நாட்கள் திட்டமிடுங்கள்.

 லேக்கடி வியூ பாயிண்ட், பாணாசுர சாகர் அணை, மீன்முட்டி அருவி, கார்லாட் லேக்கின் ரோப் ரெய்டு தவற விட வேண்டாம். உங்களுக்கு மிக பிடித்த இடமெனில் ஒரு முழு நாளும் அங்கு செலவு செய்யுங்கள், எல்லாவற்றையும் பார்த்தே ஆக வேண்டிய அவசியம் இல்லை.
முக்கியமாக மொபைலை ரூமிலேயே வீசி விட்டு கண்களாலும் மனதாலும் பதிவு செய்யுங்கள்.

Wednesday, September 27, 2017

ஸ்பைடர் விமர்சனம்

ஏ ஆர் முருகதாஸ், மகேஷ்பாபு என்பதாலும், முதல்நாளே பார்த்துவிட நேரமும், வாய்ப்பும், டிக்கெட்டும் கிடைத்தாலும் எதிர்பார்ப்புடனே படம் பார்க்க தொடங்கினேன்.

முதலில் அரை மணி நேரம் நான் விவேகம் இரண்டாம் பாகத்துக்கு தான் வந்து விட்டேனோ என்ற ஜெர்க் வராமல் இல்லை, அத்தனை செலவு செய்து வெளிநாடுகளில் படம் பிடித்த பாடல்கள் ஆரம்பிக்கும் போதே, பெண்கள் கூட வெளியே சென்று தம்மடிப்பார்கள் என்று எதிர்பார்த்தேன்.

சுடலை என்ற சைக்கோ தான் இதில் வில்லன், எஸ் ஜே சூர்யா என்ற பெரும் சவால் தரக்கூடிய, வசன உச்சரிப்பில் அசத்தகூடிய திருப்புமுனை தரக்கூடிய வில்லனை வைத்துக் கொண்டு, நாலைந்து காட்சிகளில் முடிந்திருக்க கூடிய ஒரு பகுதியை  இடைவேளைக்கு முன்புவரை எதற்காக அந்த பையனை வைத்து தேவையில்லாமல் இழுத்தார் முருகதாஸ் என்றே தெரியவில்லை? பட்ஜெட்டா பாஸ்? அதுவும் உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லையே?

கதாநாயகி இந்த படத்தில் தேவையே இல்லாத திணிப்பு, R J பாலாஜி உங்களை ஒரு இடத்திலாவது சிரிக்க வைத்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலி.

எதற்காக இவ்வளவு திட்டு என்றால், முருகதாஸ் ஏறக்குறைய நம்பிக்கை துரோகம் செய்து விட்டார்.. அதுதான்.

நேரடி படம் செய்ய மகேஷ்பாபுவிற்கு ஒரு மார்க்கெட் தமிழ்நாட்டில் உருவாகும்.

சரி படம் ஓடுமா?

கண்டிப்பாக...

ஏனெனில் இடைவேளைக்கு பிறகு எஸ் ஜே சூர்யா என்ற தனி மனிதனின் பிரித்து மேயப்பட்ட நடிப்பில் மொத்த படமும் தலை நிமிர்கிறது, அதன் பின் அமைக்கப்பட்ட புத்திசாலிதன காட்சிகள் நம்மை அசர வைக்கின்றன.   படத்தின் பாடல்கள் மொக்கையாக இருந்தாலும் BGM அட்டகாசம்.

இடைவேளைக்கு பிறகு நம்மை பரபரப்பாக வைக்கும் இசைக்காகவும், படத்தின் வில்லனுக்காகவும், ஆபாசம் இரட்டை வசனங்கள் இல்லாததாலும் பொழுது போக்கு படமாக இதை குடும்பத்துடனே சென்று பார்க்கலாம்.                    

Monday, September 11, 2017

சண்முகம் என்றொரு கூரியர் டெலிவரி மேன்

"அல்லோ எப்படிண்ணே இருக்கீங்க?" என்றபடி என்னை நோக்கி வந்த சண்முகதிற்க்கு எப்படியும் ஐம்பது வயது கடந்திருக்கும். நான்கு வருடங்களுக்கு முன் நான் பணிபுரிந்த நிறுவனத்தின் சகோதர நிறுவனம் ஒரு கொரியர் நிறுவனத்தையும் நடத்தி வந்தது. அதில் தான் அவரை தெரியும், ஐந்து வயது குழந்தையைக் கூட அண்ணா என்றுதான் கூப்பிடுவார். ஒடிசலான, கருப்பு நிற, சைக்கிளில் "சார் கொரியர்" என வரும் அவரை நீங்கள் சந்தித்தித்து உதாசீனபடுத்தியிருக்க வாய்ப்புண்டு. ஏனெனில் மிக எளிய மனிதர் அவர்.
 "அப்படியே தான் இருக்கேன், கொஞ்சம் கூட மாற முடியல" என்றேன்,  சப்தமிட்டு சிரித்தார். "அதே மாதிரியே பேசறீங்கண்ணே, வீடு வாங்கிட்டீங்கன்னு சொன்னாங்க, சந்தோசமா இருந்துச்சு, உங்க போன் நம்பர் இல்ல, என்னை கூப்பிடவே இல்ல பாத்தீங்களா" என்றார்.
"வாங்கினது கடன்ல சண்முகம், இல்லாட்டி கூப்பிட்டு இருப்பேன்ல... சும்மா பேசிட்டு இருந்தா எப்படி, டீ வாங்கி தாங்க" என்றேன். ஓடிப் போய் "ரெண்டு பெசல் டீ, நல்லா இருக்கனும் பாத்துக்கோ" "
"சிகரெட் யார் வாங்கி தருவாங்க?" என்றதும் வாங்கி வந்து பதினாறு ரூவா போட்டு இதை குடிச்சு உடம்பை கெடுத்துக்கனுமா?" என்று சலித்துக்கொண்டார்.
"சம்பளம் எவ்வளவு தராங்க?"
"நாலாயிரம், அங்கே மூவாயிரத்தி ஐந்நூரு தானே, அதான் மாறிட்டேன்"
 "வாழ்க்கை எப்படி போகுது?"
"நல்லா இருக்குண்ணே, இப்போ ஹீரோ புது சைக்கிள் வாங்கினேன், எப்படி இருக்கு?"
 "உங்க மாதிரியே நல்லா இருக்கு"
ஐம்பதுவயது காரரிடம் நீங்கள் வெட்க சிரிப்பை பார்த்தது உண்டா? அதெல்லாம் பொக்கிஷம்.
தயங்கித்தான் காசு கொடுப்பார் என்று தெரியும், அவரின் பர்சில் அம்பது ரூபாய் தான் பார்த்தேன், இருந்தாலும் கட்டாயபடுத்தி  கொடுக்க வைத்தேன், "இருப்பது ஆறு ரூவாண்ணே, இருப்பது ஆறு" என்று கவலையுடன் வந்தார். "கொடுங்க சண்முகம், பெரிய ஆளுக இதுகூட பண்ண மாட்டீங்களா?" ஒரு பெருமிதம் கலந்த வெட்க சிரிப்பு.
டெபிட் கார்டில் நான் செலவுக்கு வைத்திருந்த தொகையில் பாதியை ஏடிஎம்மில் உருவி ஒரு கவரில் வைத்து ஒட்டி, அவரின் கொரியர் அலுவலகம் சென்று, அவரிடன் ஒப்படைக்க சொல்லி விட்டு வந்திருக்கிறேன்...
அது இந்த பிச்சைக்காரன் மாமன்னனுக்கு செய்யும் கைமாறு.

Sunday, July 9, 2017

மறைந்திருக்கும் உண்மைகள் ஓஷோ

அமேசானில் ஆர்டர் செய்ததில் அடுத்தநாளே வீட்டுக்கு வந்து விட்டது. பல ஆச்சர்ய உண்மைகளை  உள்ளடக்கிய புத்தகம். அவற்றில் இருந்து சில பகுதிகள்  

   
அணு ஆராய்ச்சிக்கூடத்தில் ‘அணு விஞ்ஞானிகளைத் தவிர வேறு யாரும் உள்ளே நுழையக்கூடாது’ என்ற அறிவிப்பை ஒப்புக் கொள்கிற நாம், கோயில் விஷயத்தில் ஒப்புக் கொள்வதில்லை! கோயிலுக்கு என்று ஒரு தனி விஞ்ஞானம் இருப்பது நமக்குத் தெரிவதில்லை! கோயில்களும் தீர்த்தாடன மையங்களும் குறிப்பிட்ட சில மக்களுக்கு மட்டுமே ஆனவை! ஒரு நோயாளியைச் சுற்றி, மருத்துவர்கள் நின்று கொண்டு, அவனுடைய நோயைப் பற்றி விவாதிக்கிறார்கள். அது நோயாளியின் காதில் விழுகிறது. ஆனால் விளங்குவதில்லை. கிரேக்க, லத்தீன் கலைச் சொற்கள் கொண்டு அவர்கள் பேசுவதால் புரிவதில்லை.
இதேபோல, ஒவ்வொரு மதமும் தமக்கேயான குறியீட்டு மொழியை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. 

அதனால், நாம் நினைத்திருக்கிற இடங்கள் மெய்யானவை அல்ல; தவறானவர்கள் கைகளுக்குப் போய் விடக்கூடாது என்றும், தவறாகப் பயன்பட்டு விடக்கூடாது என்றும் அவற்றைப் பாதுகாத்து வந்திருக்கிறது மாபெரும் மரபு. பொதுமக்களுக்கு அவற்றால் சிரமங்களே தவிர எந்தப் பயனும் இல்லை. ‘அல்குஃபா’ ஊருக்குள் நுழைந்தால் பைத்தியம் பிடித்துவிடும்! எதிர்பாராமல் நுழைகிறவரும் பைத்தியம் பிடித்தே வெளியே வருவார்! ‘அல்குஃபா’வில் உருவாகும் சக்தி அலை அதிர்வுகளைத் தாங்கிக் கொள்ளும் சக்தி, சாதாரண மனிதர்களுக்கு இல்லாமற்போவதுதான் அதற்குக் காரணம். ஆனால், சரியான முன் தயாரிப்பும், கட்டுப்பாடும் இல்லாமல், அதற்குள் நுழையாமல் இருப்பதே நல்லது.

‘அல்குஃபா’வின் சில அம்சங்களைப் புரிந்து கொண்டால், நமது தீர்த்த யாத்திரைத் தலங்களைப் புரிந்து கொள்வது எளிது. ‘அல்குஃபா’வில் உறங்க முடியாது என்று சொல்கிறார்கள்! அதனால், விழித்திருக்கும் அனுபவம் இல்லாதவர்கள் அங்கே பைத்தியமாகி விடுகிறார்கள்! இரவில் விழித்திருப்பதுதான் சூஃபி ஞானிகளின் மாபெரும் ஆற்றல். இரவு முழுவதும் விழித்திருக்க அவர்களால் முடியும். ஒருவர் தொண்ணூறு நாட்கள் உண்ணாமல் இருந்தால் மிக மிகப் பலவீனமாகிவிடுவார். ஆனால், செத்துவிட மாட்டார்; பைத்தியமும் பிடிக்காது. சாதாரண ஆரோக்கிய மனிதர்கள் தொண்ணூறு நாட்கள் உண்ணா நோன்பை எளிதில் மேற்கொள்ள முடியும். ஆனால், இருபத்தோரு நாட்கள் உறங்காமல் இருக்க முடியாது!

மூன்று மாதம் உண்ணாமல் இருக்க முடிந்தாலும் மூன்று வாரம் உறங்காமலிருக்க முடியாது. மூன்று வாரம் என்பது கூட அதிகம்தான். ஒரு வாரமே சிரமம். ஆனால், ‘அல்குஃபா’வில் உறக்கமே சாத்தியமில்லை! இலங்கையிலுள்ள யாரோ ஒருவர், ஒரு புத்த சன்னியாசியை என்னிடம் அனுப்பி வைத்தார். அவரால் மூன்று ஆண்டுகளாக சரியாகத் தூங்க முடியவில்லையாம். நாள் முழுவதும் அவரது கை கால்கள் நடுங்கிக் கொண்டே இருந்தன. தொடர்ந்து வியர்வையும் வழிய, மிகவும் சிரமப்பட்டார். காலடி எடுத்து வைக்கவே பயம்! எல்லா சுய நம்பிக்கைகளும் இழந்தவராகி விட்ட அவர், சற்று மனம் பேதலித்தவராகவும் காணப்பட்டார். வலிய எடுத்துக்கொண்ட தூக்க மருந்துகளாலும் உறக்கம் வரவில்லை. சும்மா நிம்மதியில்லாமல் படுத்துக் கிடப்பார். ஆனால், உள்ளூர விழிப்பு இருந்து கொண்டே இருந்தது.

புத்தரின் ‘அனபனாசதி யோகத்தை’ப் பயன்படுத்தினீர்களா என்று அவரைக் கேட்டேன். பௌத்த சன்னியாசிகளுக்கு அது தவிர்க்க முடியாத ஒன்று. அவர் ‘ஆமாம்’ என்றார். அப்படியானால் தூக்கத்தை மறந்து விட வேண்டியதுதான். அந்த யோகத்தின் விளைவு உறக்கமின்மைதான். ஆனால் அது ஆரம்ப கட்டம்தான். உறக்கமின்மைக்கு அடுத்த கட்டம் உண்டு. அதற்குள் செல்ல வேண்டும், உடனே. முதல் கட்டத்திலேயே நின்று கொண்டிருந்தால், பலவீனம்தான் விளையும். பைத்தியமும் பிடிக்கலாம். மரணமும் சம்பவிக்கலாம்! உள்ளிருக்கும் உறக்கம் அழிக்கப்பட்டவுடனே பிரக்ஞையின் தன்மை மிகவும் மாறிவிடும். அப்போது, அடுத்த வளர்ச்சி நிலைக்கு உடனே நகர்ந்துவிட வேண்டும். 

அந்த இரண்டாவது கட்டம் என்ன என்பது தெரியுமா என்று, அந்தத் துறவியைக் கேட்டேன். ‘அது பற்றி யாருமே சொல்லவில்லை’ என்றார் அவர்.
இரண்டாவது கட்டம் பற்றி புத்தகம் எதிலும் சொல்லப்படவில்லை, முதல் கட்டத்தை எழுதி வைப்பதும் ஆபத்துதான். காரணம் முதற்கட்ட இறுதியில் உறக்கமின்மை பற்றிக் கொள்கிறது. அதனால்தான், சில விஷயங்கள் ரகசியமாக வைக்கப்படுகின்றன. யாருக்கும் தீங்கு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகத்தான் ஆன்மத் தேடலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு உதவுவதற்காகவே, வழிகாட்டுவதற்காகவே அவை அமைந்துள்ளன. அதனால்தான் தீர்த்த யாத்திரைத் தலங்கள் தேவைப்படுகின்றன. அதே சமயம் மெய்யான இடங்கள் மறைத்தும் வைக்கப்படுகின்றன. சரியான பக்குவநிலை வரும்வரை, விலகி இருக்கச் செய்யவே பொய்யான இடங்கள் உருவாக்கப்படுகின்றன. 

தப்பான ஆள் சரியான இடத்தை நெருங்கவே முடியாது. சரியான ஆள் எப்படியும் கண்டுகொள்வார். ஒவ்வொரு தீர்த்த யாத்திரைத் தலத்தின் மர்மத்தைத் திறப்பதற்கும் அதற்கான பிரத்யேக சாவி இருக்கும். சூஃபி மகான்களின் புனித இடங்களை, சமணரின் சாவி கொண்டு திறக்க முடியாது. அதுபோல சூஃபிகளின் சாவி கொண்டு சமணப் புனித தீர்த்தத்தைத் திறக்கவும் முடியாது. ஒவ்வொரு சமயத்திற்கும் தனிப்பட்ட திறவுகோல் இருக்கவே செய்கிறது. அதைச் சொல்ல நான் விரும்பவில்லை. என்றாலும் ஒன்றைச் சான்றாகச் சொல்கிறேன். திபேத்தியர்களுக்கு தனிப்பட்ட ரகசிய வரைபடங்கள் அல்லது யந்திரங்கள் இருக்கின்றன. அவைதாம் திறவுகோல்கள். இந்துக்களுக்கும் அம்மாதிரியானவை ஆயிரக்கணக்கில் உண்டு. வீடுகளில் அவர்கள் ‘லாபா-சுபா’ என்பது போன்ற சில வாசகங்களை எழுதி வைத்துக் கொள்கிறார்கள். 

அதற்கு வளமும்-நலமும் என்று பொருள். அதற்கடியில் சில எண்கள் குறிப்பிடப்பட்டிருக்கும். அவை குறியீடுகள். அவை புனிதத் தலங்களின் திறவு கோல்கள். ஆனால் அவை எதற்கு என்று அவர்களுக்குத் தெரியாது. முன்னோர்கள் செய்தார்கள் என்று இவர்களும் செய்து வருகிறார்கள். வெளியில் குறிப்பிடப்படும் உருவம் ஒவ்வொன்றும் உமக்குள்ளே பிரக்ஞையில் ஒரு உருவத்தை உருவாக்கிவிடும். சான்றாக, சாளரத்தின் வழியாக சில நிமிடங்கள் வெளியே பார்த்துக் கொண்டிருந்துவிட்டுக் கண்களை மூடினால், சாளரச் சதுரத்தின் ‘நெகடிவ்’ வடிவம் மனக்கண்ணில் தோன்றும். அதே போல ஒரு யந்திரத்தைப் பார்த்தபடி தியானம் செய்தால் உங்கள் மனதில், அந்த வடிவம் அல்லது எண்ணின் எதிர்மறை வடிவத்தை உருவாக்கிக் காட்டும். 

சில சிறப்பு தியானப் பயிற்சிகளுக்குப் பிறகு இதை நம்மால் காணமுடியும். அந்த யந்திரம் மனதில் தோன்றிய பிறகு, சில வழிபாடுகள் செய்தால், ஆன்மிகப் புனித யாத்திரை உடனே ஆரம்பமாகி விடும், உள்ளே. முல்லாவின் வாழ்வில் நிகழ்ந்ததாக ஒரு கதை. அவர் தம் கழுதையைத் தொலைத்து விட்டார். அது ஒன்றுதான் அவர் சொத்து. ஊர் முழுக்க அதைத் தேடிப்பார்த்து விட்டார். கிடைக்கவில்லை. பரிதாபப்பட்ட கிராம மக்களும் தேடிப் பார்த்தார்கள். கிடைக்கவில்லை. அது ஒரு புனித மாதம். ‘யாத்ரீகர்கள்’ அந்த ஊர் வழியாகத் தலயாத்திரை சென்று கொண்டிருந்த காலம். கழுதை அந்தக் கூட்டத்தோடு போயிருக்கலாம் என்று ஊரார் சொன்னார்கள். அப்படித்தான் இருக்க வேண்டும் என்று முல்லா நஸ்ருதீனும் நினைத்து, கழுதை இனிக் கிடைக்காது என்ற முடிவுக்கு வந்தார். 

என்றாலும், கடைசியாக ஒரு முயற்சி செய்து பார்த்து விடுகிறேன் என்றார் அவர். அப்படிச் சொல்லிவிட்டு, அங்கேயே அப்படியே நின்று, கண்களை மூடிக்கொண்டார்! பிறகு, சட்டெனக் குனிந்து கை கால்களால் ஒரு விலங்கு போல நடக்க ஆரம்பித்தார்! வீட்டைச் சுற்றிப் போனார்! பிறகு, தோட்டத்தைச் சுற்றி வந்தார்! அப்புறம் அப்படியே நடந்து போய் ஒரு பெரிய பள்ளத்தில் பார்த்தார்! அந்தப் பள்ளத்தில்தான் அவரது கழுதை விழுந்து கிடந்தது!
நண்பர்கள் ஆச்சரியப்பட்டார்கள். ‘இது எப்படி? எப்படி இதைச் செய்யத் தோன்றியது? ஏன்?’ என்று கேட்டார்கள். முல்லா பதில் சொன்னார்: ‘ஒரு மனிதனால் தன் கழுதையைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், திறவுகோல் அவனிடம் இல்லையென்று அர்த்தம். 

அதனால், கழுதையைக் கண்டுபிடிக்க நான் கழுதையாக வேண்டி வந்தது? நான் கழுதையானவுடனே, ஒரு கழுதையே எங்கே தேட வேண்டும் என்பது தெரிந்து விட்டது. கழுதை எங்கே இருக்கிறது என்பது எனக்குத் தெரியாதுதான். ஆனால், கழுதையாய்க் கண்களை மூடி நடந்தேன். கண்களைத் திறந்தபோது எதிரே பள்ளம்! அதில் என் கழுதை!’ என்றார் அவர். முல்லா நஸ்ருதீன் ஒரு சூஃபி ஞானி. இந்தக் கதையைப் படிப்பவர்கள் சும்மா சிரித்து விட்டுப் போய்விடுவார்கள். ஆனால் அதற்குள் ஒரு திறவுகோல் இருக்கிறது. தேடலுக்கான சாவி அது. ஆன்மத் தேடலுக்கு அது ஒன்றுதான் வழி. அதனால், ஒவ்வொரு புனித இடத்திற்கும் ஒரு சாவி இருக்கிறது. அது யந்திர வடிவிலும் இருக்கும். அப்படிப்பட்ட இடங்கள், உங்களை, சக்தி வாய்ந்த வெள்ளப் பெருக்கின் நடுவில் 
தள்ளிவிட்டு விடுகின்றன. அப்புறம் நீங்கள் சிரமமின்றி வெள்ளத்தின் போக்கிற்கேற்ப மிதந்து செல்லலாம்.

இன்னொரு முக்கியமான அம்சம், மனித வாழ்வில் பிரக்ஞை ஒன்றைத் தவிர, மற்ற எல்லாமே பொருள்கள்; பொருளால் உருவாக்கப்பட்டவை, உருவானவை. ஆனால், உள் பிரக்ஞை என்ன என்பது நமக்குத் தெரியாது. நமது உடலை நமக்குத் தெரியும், இது எல்லா வகையிலும் பொருளோடு தொடர்புடையது. ரசவாதம் பற்றிய சில விஷயங்களை நாம் இப்போது புரிந்து கொள்வது நல்லது. அப்போதுதான் புனித தலங்களின் இரண்டாவது அம்சத்தை, அர்த்தத்தைப் புரிந்து கொள்ளமுடியும். ரசவாத வித்தையின் வழிமுறை மதத்தின் வழிமுறைதான். தண்ணீரை நீராவியாகவும் நீராவியை மறுபடியும் தண்ணீராகவும் இதையே மறுபடியும் நீராவியாகவும் இப்படியே ஆயிரக்கணக்கான முறை, ஒரே நீரைச் செய்து கொண்டே வந்தால், அந்தத் தண்ணீர் ஓர் அபூர்வமான சக்தியைப் பெற்றுவிடும்!

சாதாரணத் தண்ணீரும் அதுவும் ஒன்றல்ல. ஆரம்பத்தில் இது ஒரு வேடிக்கை போலதான் தோன்றும். இதனால், தண்ணீரின் தன்மை எப்படி மாறும்? தண்ணீரை மீண்டும் மீண்டும் வடிகட்டி சுத்தப்படுத்திக் கொண்டே இருப்பதால், அதன் குணம் எப்படி மாறும்? அது சுத்தமாக இருக்கும்; அவ்வளவுதான். ஆனால், இன்று அறிவியல், நீரின் பண்பு மாறுகிறது என்பதை ஒப்புக் கொள்கிறது. அது எப்படி என்று தெரியாவிட்டாலும், பண்பு மாற்றம் ஏற்படவே செய்கிறது. பல்லாயிரம் முறை அப்படியே செய்து கொண்டு வந்தால், மிகச் சிறந்த தூய நீர் கிடைக்கவே செய்யும். உங்கள் உடலின் 70 சதவீதம் பகுதி தண்ணீர்தான் என்பது உங்களுக்குத் தெரியுமா? கடல் நீரின் ரசாயனக் கலவையும் அப்படித்தான். 

சரியான அளவு உப்பைச் சாப்பிடவில்லையானால், உடலின் உப்பு அளவு குறைந்து போய்விடும். கடல் நீரில் உள்ள அளவை விடக் குறைந்துவிடும்.
உடலின் உப்பு அளவு குறையும்போது உங்கள் பிரக்ஞையிலும் மாற்றம் ஏற்படும். ஆயிரம் மடங்கு சுத்திகரிக்கப்பட்ட நீரை அருந்தினாலும் உங்கள் விருப்பங்கள் மனப்போக்குகளில் மாற்றம் ஏற்படும். ரசவாதிகள் இன்னொரு வகையான சோதனையை மேற்கொண்டு வருகிறார்கள். தண்ணீரை லட்சக்கணக்கான முறை தூய்மைப் படுத்த வேண்டுமானால் பல ஆண்டுகள் பிடிக்கும். அதனால், ஒவ்வொரு நாளும் அதைச் செய்ய ஆரம்பித்தார்கள். அதாவது, ஒரு நாள் கொதிக்க வைப்பது; மறுநாள் குளிர வைப்பது. இது இரு வகையான மாற்றங்களை ஏற்படுத்தும். ஒரே வகையாகச் செய்து கொண்டிருந்தால் சலித்துப் போய்விடும், சில நாட்களிலேயே. 

அதனால் அவர் தம் சோதனையை நிறுத்தி விட்டுப் பழைய மனநிலைக்குத் திரும்பிவிடுவார். அந்த வேளையில் அவரது சலிப்பே ஒரு திருப்புமுனையாகி விடும். அந்தச் சலிப்பே புதிய பிரக்ஞையாகப் பிறப்பெடுத்து விடும். நாள்தோறும் இரவு பத்து மணிக்குப் படுக்கப் போய்க் கொண்டிருந்தால், பிறகு அந்த நேரம் வந்ததும் உறக்கம் கண்களைச் சுழற்றும். அப்போது தூங்கப்போகாமல் விழித்திருக்க முயன்றால், அரைமணி நேரம் கழித்து அதிகமாக உறக்கம் வரும் என்றுதான் நினைப்போம். ஆனால், அப்படி நிகழ்வதில்லை! உறக்கம் சுத்தமாகக் கலைந்து போய், காலையில் காணப்பட்டதை விட அதிக விழிப்புணர்வு ஏற்பட்டு விடுகிறது! அந்தப் பத்து மணி ஒரு திருப்பு முனையாக மாறி விடுகிறது. அந்த நேரம் வழக்கமாகத் தூங்கும் நேரம். அதைப் புறக்கணித்தால், உடலின் வழக்கமான இயக்கமுறை, ஒழுங்கு பாதிக்கப்பட்டு விடுகிறது. நாம் விழித்திருக்க வேண்டும் என்பதை உடல் புரிந்து கொண்டு விடுகிறது. 

அதனால், அது, தான் சேமித்து வைத்திருக்கும் அணையிலிருந்து, உற்சாக வெள்ளத்தைத் திறந்து விட்டு விடுகிறது. அப்புறம் உறக்கம் எப்படி நிற்கும்? 
உற்சாகம்தானே நிலைக்கும்! ஆயிரம் மடங்கு நீரைத் தூய்மைப் படுத்தியவர் சலித்துப் போவார். அவரது குரு தொடர்ந்து செய்யச் சொல்லலாம். இன்னும் பத்துப் பதினைந்து ஆண்டுகள் செய்யச் சொல்லலாம்! சகிக்க முடியாத ஒரு கட்டம் வரும். இனி ஒரு முறை செய்தால், செத்தே விடுவோம் என்ற நிலை! ஆனால், குரு தொடர வற்புறுத்துகிறார்! அதனால், ஒரு பக்கம் நீரின் தரம் கூடுகிறது. மறுபக்கம் அவரது மனோபாவம் மெதுவாக மாற்றம் அடைந்து விடுகிறது. அப்புறம் அந்தச் சிறப்பான தூயநீர், பயன்படுத்துகிறவர் பிரக்ஞையையும் மாற்றி விடுகிறது. அது கங்கை நீரைப்போல! மற்ற உலக ஆற்று நீர்களை விட வேறு சில தனிப்பட்ட அம்சங்கள் கங்கை ஆற்று நீருக்கு ஏன் இருக்கிறது என்பதை விஞ்ஞானிகளால் இதுவரை கண்டிபிடிக்க முடியவில்லை.

நன்றி: கண்ணதாசன் பதிப்பகம், 

Saturday, June 24, 2017

வயநாடு

எனது தம்பிக்கு திருமணம் நிச்சயமாகி இருந்தது, அவன் துபாயில் வேலை செய்து கொண்டிருக்கிறான், திருமணத்திற்க்கு பத்திரிக்கை கொடுக்க ஊட்டி, கூடலூர் போக வேண்டி இருந்தது. திருமணதிற்க்கு பத்து நாள் மீதம் இருக்கையில் தமிழ்நாடு வந்து சேர்ந்தான். பத்திரிக்கை கொடுத்துவிட்டு அப்படியே வயநாடு போய் இரண்டு நாட்கள் சுற்றி விட்டு திருமணத்திற்க்கு முன்பு ஒரு வாரம் வீட்டு சிறைக்கு அனுப்பி விட திட்டமிட்டு, மே கடைசி வாரத்தில்  வயநாட்டின் ஒரு பகுதியான புல்பாலியில் அமைந்துள்ள luxinn என்ற விடுதியில் அறை முன்னதாகவே பதிவு செய்து வைத்திருந்தோம்.
    கோவையில் இருந்து அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் காரில் கிளம்பி விட்டோம், இரண்டு பேர் கொண்ட பயணம், கடைசி நாட்களில் இன்னமும் இரண்டு நண்பர்கள் வரலாமா என்று கேட்க, அது நான்கு பேராக மாறியது.
 பரளியாறு தாண்ட ஆரம்பித்ததுமே அந்த ஊட்டி குளிர் காரின் ac யை அணைத்துவிட்டு அதை அனுபவிக்க தூண்டியது. மலைமேல் பயணிக்கும்  காலை பயணங்கள் உண்மையில் சொர்க்கங்கள்.    
   ஊட்டி வரை செல்பவர்கள் அதை தாண்டி கூடலூர் ரோட்டில் ஒரு பதினைந்து கிலோ மீட்டராவது செல்லுங்கள், அங்கே குளிரும் அதிகம், ஊட்டியின் வியாபார தன்மையை தாண்டி அழகு பறந்து விரிந்து கிடக்கிறது, அதுவும் பைகார தாண்டி மலை பார்க்கும் பகுதி இருக்கிறது, மேகம் கூட்டமாய் தலை உரசும் அங்கே தள்ளு வண்டியில் ஐஸ்கிரீம் சாப்பிடும் கணம் இருக்கிறதே, அதை விளக்கும் அளவு அழகியல் எழுத்தில் எனக்கு கைவரவில்லை. மகா அற்புதம் என கொள்ளுங்கள்.
 வயநாடு போன்ற தெரியாத இடங்களுக்கெல்லாம் கூகுள் மேப் எனும் கடவுள் கூடவே உதவிக்கு வருகிறார், ஒரு தடவை கூட நாங்கள் யாரிடமும் வழி கேட்கவில்லை, நேராக Luxinnக்கு அது கூட்டி சென்று விட்டது.
 கூடலூரில் இருந்து பத்து கிமீ தாண்டி சென்றால் குளிர் போய் விடுகிறது.
அதே கூகுள் வயனாடை அழகான படங்களை போட்டு, கேரளாவின் சொர்க்கம் என்றெல்லாம் வர்ணித்து வைத்திருக்கிறது, எக்கசக்க எதிர்பார்ப்புடன் கேரளாவில் நுழைந்தால் சுள்ளென அடிக்கும் வெயில் பட்டவயல் எனும் மலைக்கு கீழிருக்கும் பகுதியில்  வரவேற்கிறது. நாங்கள் சென்ற சமயம் மழை வேறு இல்லை, அடர் வன பகுதிகள் கூட பாதி வறண்டு போய் இருந்தது. நாங்கள் சென்ற luxinn வெகு தொலைவு வேறு.
 வயனாட்டுக்கு செல்வோர் கல்பேட்டாவில் தங்க அறை பதிவு செய்து கொள்ளுங்கள், luxinn பற்றிய நல்ல கூகிள் ரேட்டிங்கில் நாங்கள் ஏமாந்தோம், முதலாவது அதன் முகப்பு மட்டும் நன்றாக இருக்கிறது, தங்கும் அறைகள் அளவில் மிக சிறியவை, டீலக்ஸ் ரூம்களுக்கு தரும் விலை மிகமிக அதிகம், உள்ளே சாப்பிட ஹோட்டல் இல்லை, உணவு ஏற்பாடு செய்து தருகிறோம் என்றார்கள்,  காலையில் சுடுதண்ணிர் மட்டும் அரை மணிநேரம் வருகிறது, பழைய டிவி, மொபைல் சார்ஜ் போடக்கூட ப்ளக் பாய்ண்டுகள் இல்லை, என் கார் சார்ஜர் வேறு பழுதாகி உயிரை வாங்கியது. முக்கியமாக மாதம் ஒருநாள் வீட்டில் அனுமதி வாங்கி குடிக்கும் எனக்காக என் தம்பி அங்கிருந்து கிட்டத்தட்ட ஐயாயிரம் செலவில் இரண்டு புல் ஸ்காட்ச் வாங்கி வந்திருந்தான், குடிக்க அனுமதி இல்லை என்று சொல்லிவிட்டார்கள், ரூம் பாய்க்கு கொஞ்சம் காசு கையில் திணித்து குடித்தது தனிக்கதை.

 சரி வயனாடுக்கு வருவோம், குருவா ஐலன்ட் என்று கொடுமை அங்கே இருக்கிறது, மதியம் ஒரு மணிக்கு சென்றால் அதற்க்கு பின் அங்கு அனுமதி இல்லை என்றார்கள்.

பணசுரா அணை பற்றி ஓவர் பில்டப் கொடுத்தார்கள், அங்கே சென்றால் நீர் வரத்து மிக மிக குறைவு. பக்கத்தில் மீன் முட்டி அருவி இருக்கிறது அதுவும் அதே லட்சணத்தில் தான்.
 ஒரே பெரிய நிறைவும் ஆறுதலும் பூக்கொட் லேக், அங்கே நாங்கள் செல்லும் வழியில் மழை, அது அழகாக இருந்தது. செம்பரா, எடக்கல் பாறைகள், நீலிமலை காட்சிமுனை, கபினி என்றெல்லாம் சொன்னார்கள். சுமாராக இருந்தாலே உற்சாகமாக பயணங்களை அனுபவிக்கும்  எனக்கே போதுமடா சாமி என இருந்தது, ரூம் திரும்பி விட்டோம்.
 நீதி என்னவெனில், ஊட்டி குளிரை, பைகாரா வரை அனுபவித்து விட்டு கீழே கடும் வெயில் உள்ளதால் (கோவையை விட மிக அதிகம்) மண்டை காய்கிறது, அதிக எதிர்பார்ப்போடு போகக்கூடாது, மிக முக்கியமாக நீங்கள் மழை நன்கு பெய்து கொண்டிருக்கையில் அங்கு பயணம் செல்லுங்கள், ஒவ்வொரு சுற்றுலா இடத்துக்கும் தூரம் மிக அதிகம், அதாவது நாங்கள் தங்கி இருந்த விடுதியில் இருந்து பணசுரா அணை போய், பூக்காடு முடித்தால் ஒரு நாள் ஆகிறது, ஏறக்குறைய நூறு கிலோ மீட்டர்கள், அதே போலதான் எல்லா சுற்றுலா இடங்களும் உள்ளன, அங்கிருந்த ரோடுகளை போல் படுகேவலமான குண்டும் குழியுமான ரோடுகளை நான் சமீபத்தில் எங்குமே பார்க்கவில்லை, ஒரு சில இடங்களில் வண்டியை பத்து, இருபது ஸ்பீடில் ஓட்டினாலே போதும் என்றாகி விடுகிறது. நன்கு திட்டமிட்டால் மட்டுமே ஒரு நாளில் மூன்று இடங்களை பார்க்க இயலும்.
 அவ்வளவு செலவு செய்து அங்கே போனதை விட, ஆசனூரில் நீச்சல்குளம் உள்ள ஹில்வியூ போன்ற காட்டேஜ்களுக்கு இரண்டு கோழி வாங்கி போயிருந்தால், சிறப்பாக அசைவ உணவு செய்வார்கள், அனுபவித்து குடித்து  சாப்பிட்டு, நீச்சல் குளத்தில் விளையாடி,  மலையை ரசித்தபடி அமைதியாக அமர்ந்து விட்டு, இரவு வனஉலா சென்று அதிஷ்டம் இருந்தால் புலியை கூட பார்த்து திரும்பி இருக்கலாம் என்ற எண்ணம் வராமல் இல்லை.

  

Thursday, June 22, 2017

ரங்கூன் ஒரு பார்வை

நடிப்பில் நன்கு தேறி வருகிறார் கௌதம்கார்த்திக், 
கருப்பு மேக்கப்பில் பர்மாவிலிருந்து தமிழ்நாட்டுக்கு குடியேறிய மக்களில் ஒருவனாக சிறப்பு... சண்டை காட்சிகள் இயல்பாய் இருக்கின்றன. ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளர் ராஜ்குமார் பெரியசாமிக்கு நல்ல ஆரம்பத்தை அவர் குருவே பட தயாரிப்பின் மூலம்  கொடுத்திருக்கிறார். எதிர்பார்க்கும் படங்களின்  இயக்குனராக வருவாரா என்பது அவரின் இரண்டாம் படத்தில் தெரியும்.

"இங்கே நல்லவன் கெட்டவன் யாரும் கிடையாது, அதிஷ்டத்தை தேடி அலையிற துரதிஷ்டசாலிகள்தான்"
"பணம் நிஜமல்ல வெங்கட், நிஜம் மாதிரி "  சில கூர்மையான வசனங்கள் கவர்கிறது,

யாத்ரிகா பாடலில் அந்த பிரிவு, ஆறு, புத்தர் சிலை, மீண்டும் பர்மா பயணம் என பர்மாவை மிக அழகாய் படம் பிடித்திருக்கிறார்கள். 

"உனக்கென்ன கலெக்டர் வேலையா கிடைச்சுச்சு உங்கொப்பன் பெருமைப்படுறதுக்கு?"என இடையிடையே வரும் பாலா பட டைப் கலாய்தல்கள் சிரிப்பை வர வைக்கின்றன. அதேபோல எதிர்பாராத அந்த துரோகமும். 

இந்தியாவில் இருந்து பர்மாவிற்கு கொண்டு செல்லப்படும் தங்க கடத்தல் சீன்கள் சாதாரணமாக இருந்தாலும் பரபரக்க வைக்கிறது. இடைவேளையில் தரப்படும் மிகப் பெரிய ட்விஸ்ட் சரியாத பாதை கிடைக்காமல் தடுமாறி பின் ட்ராக்கில் வந்து சேர்க்கிறது.  ஆங்காங்கே அயன் போன்ற சில  படங்கள் நினைவு வருவதை தடுக்க இயலவில்லை 
கிளைமாக்ஸ்.... 
சரி வேண்டாம், அதை  பற்றி சொல்லி உங்கள் ஆர்வத்தை கெடுக்க விரும்பவில்லை. 

  ஒருமுறை தாராளமாக பார்க்கலாம். 

Tuesday, June 20, 2017

அனலோன் கவிதைகள்

சமீபத்தைய கவிதைகளில் அனலோன் கவிதைகள் வித்தியாசமாகவும், மனதுக்கு மிக நெருக்கமாகவும் இருக்கிறது. கவிதை உலகில் தனக்கென தனி இடம் பிடிக்க வாய்ப்பும் இருக்கிறது  அவர் எழுத்துக்கள் கூடிய விரைவில் புத்தக வடிவில் வர வாழ்த்துக்கள்.

அவரின் கவிதைகள் சில

மரணம் கொள்ளும் பயணம்


செங்கேழ் மேனி தொட்டு
சிறிததிர்ந்து
விலகி
பின்னரும்  விண்ணில் மீண்டெழ
முயல்கிறது
சிறுபறவை உதிர்த்த இறகொன்று...!!

மரணித்த பின்னும்
தன் பயணம் தன்னை
கொண்டாடித் தீர்க்கிறது
நெடுமரம் உதிர்த்த சருகொன்று...!!


நீள்நதி அலையில்
மௌனமாய் பயணிக்கிறது
செஞ்சாந்து தீற்றல் களைந்து,
கரையோர காட்டு அய்யனார்
சூடிய மாலையொன்று..!!

காட்டையாண்ட
பெருஞ்சிறுத்தை காலம் கொண்டு
வீழ்ந்திறக்க,
பருவுடல் தன்னை
பகிர்ந்து நகட்டிச்செல்கிறது
சிற்றெறும்புக்   கூட்டமொன்று..!!
--------------------------------------------------

அப்பாயி...
எனக்கொரு ஆசை..!!


ஏனோ இன்றுன்னை எண்ணத் தோன்றியது..
எங்கோ ஆழ்மனதின் அடியாழத்தில்
நீ இரவு முழுவதும் வீசிய
ஓலைகாற்று அலைபாய்ந்துகொண்டிருக்கிறது..!!


இருளேறிய மண்வீடு..
பனை உத்திரங்களும் ஓலைக்கூரையையும்
பார்த்தபடி கிடந்துறங்கிய நினைவுகள்
படிமங்களாக உறைந்து கிடக்கிறது..!!


மின்சாரம் இல்லாத
அந்நாட்களில் சிம்னி விளக்கில்
புளிக்குழம்பும்,
கரண்டி முட்டையும்
இந்த 35 வருடங்களில் கிடைக்கவில்லை தாயே..!

அரிக்கேன் வெளிச்சத்தில்
கால் நீட்டி நீ அமர்ந்து, நிலவுபாட்டியாய்
மண்சுவரில் உன் நீண்ட பெருநிழல் விழுந்து
புரியாத மொழியில் பாடிய தாலாட்டில்
லயித்துக்கிடந்த சிறுவயதுப்பிராயம்
திரும்பாது எனிலும்,
காலங்கடந்தும் நெஞ்சில் நிக்குதம்மா..!!

டயர் செருப்பு அணிந்திருப்பாய் ..
பனைவெல்லம் காய்ச்சுகையில்
பதமாய் ..
சிறு குச்சி நீட்டி சவ்வுமிட்டாய் எடுத்து தருவாய்..!!

பொன்னாங்கண்ணி கண்மாயில்
பனைஓலை வெட்டி
கருவேல முள் தைத்து காத்தாடி செய்து கொடுப்பாய்..!!
ஐந்து கண் நுங்கெடுத்து பனைவண்டி
எனக்களித்தாய்..!!

என்ன தருவேன் நான் உனக்கு ஏங்கி ஏங்கி உன்னை நினைப்பதைத் தவிர..?
அப்பாயி..
எனக்கொரு ஆசை...
நிறைவேற்றுவாயா ..??

எனக்கான தீர்ப்பு நாள் தாண்டி
விண்ணேகி நான் வருகையில்
நின்மடியில் படுத்து
ஓலைக்காற்றை சுவாசிக்க வேண்டுமம்மா..!!

உன் கண்டாங்கி சேலை நுனி
நான்பற்றி
கண்துயில வேண்டுமம்மா..!!
-----------------------------------------------------------
நினைவேந்தல்

பலநாள் முன்பு
அகால மரணமடைந்த
நண்பனுடைய  பிறந்தநாளின்
முகநூல்  நினைவுறுத்தல்
குறுஞ்செய்தி
கண்டு
ஒரு கணம்
திகைத்து அடங்கியது உள்ளம்..!!


குழந்தைப் பலி கொண்ட
வீட்டின்
உத்திரத்தில்
கட்டிய தொட்டிலின்
கயிற்றுத் தடம் உடனே
மறைவதில்லை..!!


அய்யம்மாள் கிழவி
தனித்து வாழ்ந்து
மரித்துப்போன சிலவருடம் பின்னும்
பாக்குடைப்பான்
திண்ணையிலேயே இருந்தது..!!


தொழுவம் கட்டிய
லட்சுமியின் கழுத்துச் சலங்கை
கோமாரி கண்டு செத்த பின்னும்
அவ்வப்போது காற்றில் சலசலத்து
அவளை நினைவுறுத்தும்..!!
----------------------------------------------

ஆதியில் ஆப்பிள்...



காது மடல் நுனி...
கழுத்துப்புறம் ஏதோ ஊர… ,

கண்ணெதிரில் நட்சத்திரங்கள்… !
கால்கள் பின்னி
ஊர்ந்த கைகளுக்கிடையே
சிக்கித்தவித்தது வெட்கம்… !
படர்கையில் பாதிதேகம்
நிலைக்கண்ணாடியில்…,
தோன்றி விலக,
மறைந்து சிரித்தது வெட்கம்…!
பின்னிரவுப்பறவையொன்று
ஜன்னல் வழிபார்த்து
சீட்டியடித்தது….. !



மயக்கம் பாதி, தயக்கம் மீதி…
முடிவில் முதலாவது ஜெயிக்க,
தயக்கமும், வெட்கமும்…
கட்டில் நுனியில்… !



தேக அணுக்கள்ஒன்றாகக் குவிந்து,
பின்..ஒவ்வொன்றாய் பிரிய…
வியர்வைத்துளியில்,
கழுவப்பட்டது நாணமும் , தயக்கமும்…. !
புரியாத புதிராய்புதிதாய்த்
தொடங்கத் தொடங்க,புரியாதவை
புலப்படலாயின…!


இருபது வருடங்களாய்
பூட்டிவைத்தபொக்கிஷங்கள்
கொள்ளையிடப்பட்டும்,வாரி வழங்கிய திருப்தியும்,
மிதமிஞ்சிய உணவுண்ட திருப்தியும்,
உண்டாயின…. !
மூச்சூக்காற்றும் வெப்பமாக,
வியர்வையில் தேகம் தெப்பமாக…!


களைத்து விலகும் போது
காதல் மட்டும் பிரவாகமாய்ப்பொங்கும்….. !
வாழ்க…… !
ஆதியில் ஆப்பிள் கடித்தவன்…. !
-------------------------------------------------
உன் சிலநிமிட காத்திருப்புகள்...


நீயின்றி நான் கடக்கும்
சோலையில் உணர்ந்தேன்
பாலையின் வெப்பத்தை…!!

உனதுமழைத்தாகம் தெரிந்தோ என்னவோ,
நாமில்லா சமயங்களில்
பெய்வதில்லை மழை …!!

உனக்குத் தெரியுமா உன் உச்சந்தலை
தொட்டமுதல் மழைத்துளிஎதுவென…… ?!!!

நீ காத்திருக்கும் நிறுத்தத்தில் நீண்டநேரம் என் பேருந்து நிற்பதாய்
எனக்குள் பிரமை… !!!

காத்திருப்புகளும்,
சில நொடி கவனிப்புகளுந்தான் காதலின் சொர்க்கம்...

உனக்கான ...பூக்கள் வாங்கிய
கடைக்காரன் ஏளனமாய்ப்
பார்க்கிறான் இன்று……

உனது மறுதலிப்பு
அவனுக்குத் தெரிந்திருக்க
வாய்ப்பில்லை…! எனக்கான

உன் சிலநிமிட காத்திருப்புகள்
என்னுள் ஏற்படுத்திய
அதிர்வுகள் பல…! இன்று நீ
எனக்காகக் காத்திருப்பதில்லை…!

இருந்தாலும் ,
நான்தவறவிட்ட
சில நிமிடங்கள் தான்,
எனக்குத் தரப்பட்ட அவகாசங்கள்
என்பதை நான்உணரவில்லை……!

நாம் ஏன் மீண்டும் பிறக்கக் கூடாது…….
நமக்கான ,
நமது காதலைப்புரிந்து
கொள்ள….?!!!
-------------------------------------
வாட்ஸ்அப் வழி பகிர்ந்த செந்தில்குமாருக்கு நன்றி.  

Monday, June 19, 2017

தந்தையாக்கியவளுக்கு நன்றி

வாழைத்
தோட்டத்திற்குள்
வந்து முளைத்த...
காட்டுமரம் நான்..!
எல்லா மரங்களும்
எதாவது...
ஒரு கனி கொடுக்க ,
எதுக்கும் உதவாத...
முள்ளு மரம் நான்...!
தாயும் நல்லவள்...
தகப்பனும் நல்லவன்...
தறிகெட்டு போனதென்னவோ
நான்...
படிப்பு வரவில்லை...
படித்தாலும் ஏறவில்லை...
இங்கிலீஷ் டீச்சரின்
இடுப்பைப் பார்க்க...
இரண்டு மைல் நடந்து
பள்ளிக்கு போவேன் .
பிஞ்சிலே பழுத்ததே..
எல்லாம் தலையெழுத்தென்று
எட்டி மிதிப்பான் அப்பன்...
பத்து வயதில் திருட்டு...
பனிரெண்டில் பீடி...
பதிமூன்றில் சாராயம்...
பதினாலில் பலான படம்...
பதினைந்தில்
ஒண்டி வீட்டுக்காரி...
பதினெட்டில் அடிதடி...
இருபதுக்குள் எத்தனையோ...
பெண்களிடம் விளையாட்டு...
இரண்டு ,மூன்று முறை கருக்கலைப்பு...
எட்டாவது பெயிலுக்கு...
ஹெட்மாஸ்டர் வேலையா கிடைக்கும் ?
மண்லாரி ஓட்டினால் லோடுக்கு...
நூறு தருவார்கள .
வாங்கும் பணத்துக்கு...
குடியும் கூத்தியாரும் என...
எவன் சொல்லியும் திருந்தாமல்...
எச்சிப் பிழைப்பு பிழைக்க ...
கை மீறிப்
போனதென்று...
கால்கட்டுக்கு ஏற்பாடு செய்தனா் .
வேசிக்கு காசு
வேணும் ...
வருபவள் ஓசிதானே...
மூக்குமுட்டத் தின்னவும்...
முந்தானை விரிக்கவும்...
மூன்று பவுனுடன் ...
விவரம் தெரியாத ஒருத்தி...
விளக்கேற்ற வீடு வந்தாள் .
வயிற்றில் பசித்தாலும்...
வயிற்றுக்குக் கீழ் பசித்தாலும்...
வக்கணையாய் பறிமாறினாள்...
தின்னு கொழுத்தேனே தவிர...
மருந்துக்கும் திருந்தவில்லை...
மூன்று பவுன் போட
முட்டாப் பயலா நான்...
இன்னும் ஐந்து வேண்டுமென்று ,
இடுப்பில் மிதித்து அனுப்பி வைக்க ...
கறவை மாட்டை சந்தைக்கு அனுப்பி ,
நான் கட்டினவளை வீட்டுக்கு அனுப்பினான் ,
சொந்தம் விட்டுப்போகாமல் இருக்க...
மாமனாரான மாமன்...!
பார்த்து வாரமானதால்...
பசிக்கிறதென்று கைப்பிடிக்க..,
தள்ளிப் போனதென்று தள்ளி விட்டாள்...
சிறுக்கிமவ .
இருக்கும் சனி...
போதாதென்று
இன்னொரு சனியா..?
மசக்கை என்று சொல்லி...
மணிக்கொரு முறை வாந்தி..,
வயிற்றைக் காரணம் காட்டி...
வாய்க்கு ருசியாய் சமைப்பதில்லை..,
சாராயத்தின் வீரியத்தால்...
சண்டையிட்டு வெளியே அனுப்ப..,
தெருவில் பார்த்தவரெல்லாம்
சாபம் விட்டுப்
போவார்கள் .
கடைசி மூன்று மாதம்...
அப்பன் வீட்டுக்கு
அவள் போக..,
கறிவேப்பிலைக்காரி ஒருத்தி...
வாசனையாய் வந்து போனாள்..,
தர்ம ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளதாக...
தகவல் சொல்லியனுப்ப..,
ரெண்டு நாள் கழித்து...
கடமைக்கு எட்டிப் பார்த்தேன்...
கருகருவென
என் நிறத்தில்...
பொட்டபுள்ள..!
எவன் கேட்டான் இந்த மூதேவியை... ?
'கள்ளிப் பால் கொடுப்பாயோ ...
கழுத்தை திருப்புவாயோ...
ஒத்தையாக வருவதானால் ...
ஒரு வாரத்தில்
வந்து விடு '
என்று சொல்லி திரும்பினேன் .
ஆறு மாதமாகியும் அவள் வரவில்லை...
அரசாங்க மானியம்
ஐயாயிரம்...
கிடைக்குமென்று
கையெழுத்துக்காகப்
பார்க்கப் போனேன் ,
கூலி வேலைக்குப் போனவளைக்
கூட்டி வரவேண்டி...
பக்கத்து வீட்டு பாப்பா ஓடிச் செல்ல...
ஆடி நின்ற ஊஞ்சலில்...
அழுகுரல் கேட்டது..,
சகிக்க முடியாமல்
எழுந்து ...
தூக்கினேன் ...
அதே அந்த பெண்
குழந்தை..!
அடையாளம் தெரியவில்லை ...
ஆனால் அதே கருப்பு...
கள்ளிப் பாலில்
தப்பித்து வந்த அது ,
என் கைகளில் சிக்கிக் கொண்டது..,
வந்த கோபத்திற்கு...
வீசியெறியவே தோன்றியது...
தூக்கிய நொடிமுதல்...
சிரித்துக் கொண்டே இருந்தது,
என்னைப் போலவே...
கண்களில் மச்சம்,
என்னைப் போலவே
சப்பை மூக்கு,
என்னைப் போலவே
ஆணாகப்..,
பிறந்திருந்தால் இந்நேரம் இங்கிருக்க
வேண்டியதில்லை...,
பல்லில்லா வாயில்...
பெருவிரலைத் தின்கிறது,
கண்களை மட்டும்..,
ஏனோ சிமிட்டாமல் பார்க்கிறது,
ஒரு கணம் விரல் எடுத்தால்...
உதைத்துக் கொண்டு அழுகிறது,
எட்டி... விரல் பிடித்துத்..
தொண்டை வரை வைக்கிறது,
தூரத்தில்
அவள் வருவது கண்டு...
தூரமாய் வைத்து விட்டேன்...
கையெழுத்து வாங்கிக்கொண்டு...
கடைசி பஸ்ஸுக்கு திரும்பி வருகிறேன்,
முன் சீட்டில் இருந்த குழந்தை...
மூக்கை எட்டிப் பிடிக்க
நெருங்கியும்...
விலகியும் நெடுநேரம்...
விளையாடிக் கொண்டு இருந்தேன்!
ஏனோ அன்றிரவு ...
தூக்கம் நெருங்கவில்லை,
கனவுகூட
கருப்பாய் இருந்தது,
வெளிச்சம் வரும்வரை காத்திருந்தேன்...
போட்ட கையெழுத்துப் பொருந்தவில்லை...
என்ற பொய்த்தனத்தோடு ,
இன்னொரு கையெழுத்துக்கு...
மீண்டும் சென்றேன்,
அதே கருப்பு,
அதே சிரிப்பு,
கண்ணில் மச்சம்,
சப்பை மூக்கு...
பல்லில்லா வாயில்
பெருவிரல் தீனி...
ஒன்று மட்டும் புதிதாய் ...
எனக்கும் கூட
சிரிக்க வருகிறது ...
கடைசி பஸ், ஆனால் பேருந்தில்...
எந்த குழந்தையும் இல்லை .
வீடு நோக்கி நடந்தேன்,
பாதி வழியில் கறிவேப்பிலைகாரி...
கைப் பிடித்தாள்
உதறிவிட்டு நடந்தேன்...
தூக்கம் இல்லை
நெடுநேரம்...
பெருவிரல்
ஈரம் பட்டதால் ...
மென்மையாக
இருந்தது ...
முகர்ந்து பார்த்தேன் ....
விடிந்தும் விடியாததுமாய்...
காய்ச்சல் என்று சொல்லி...
ஊருக்கு
வரச் சொன்னேன்,
பல்கூட விளக்காமல் ...
பஸ் ஸ்டேண்டுக்கு சென்று விட்டேன்,
பஸ் வந்ததும் லக்கேஜை
காரணம் காட்டி...
குழந்தையைக் கொடு என்றேன் !
பல்லில்லா வாயில் பெருவிரல் !
இந்த முறை பெருவிரலைத் தாண்டி... ஈரம் எங்கோ
சென்று கொண்டு இருந்தது...
தினமும் என் மீது படுத்துக்கொண்டு...
பொக்கை வாயில் கடிப்பாள்,
அழுக்கிலிருந்து
அவளைக் காப்பாற்ற...
நாளுக்கு நாலைந்து முறை குளிப்பேன்,
பான்பராக் வாசனைக்கு...
மூக்கைச் சொரிவாள் ,விட்டு விட்டேன் ...
சிகரெட் ஒரு முறை..,
சுட்டு விட்டது
விட்டு விட்டேன்...
சாராய வாசனைக்கு...
வாந்தியெடுத்தாள் ...விட்டு விட்டேன்,
ஒரு வயதானது ...
உறவுகளெல்லாம்...
கூடி நின்று ,
'அத்தை சொல்லு '
'மாமா சொல்லு '
'பாட்டி சொல்லு '
'அம்மா சொல்லு 'என்று...
சொல்லிக் கொடுத்துக் கொண்டு இருந்தார்கள்...
எனக்கும் ஆசையாக இருந்தது,
'அப்பா 'சொல்லு
என்று சொல்ல,
முடியவில்லை ......
ஏதோ என்னைத் தடுத்தது,
ஆனால் அவளை எதுவும் தடுக்கவில்லை...
அவள் சொன்ன முதல் வார்த்தையே...
'அப்பா'தான்!
அவளுக்காக எல்லாவற்றையும்...
விட்ட எனக்கு ,
அப்பா என்ற
அந்த வார்த்தைக்காக...
உயிரைக்கூட விடலாம் என்று தோன்றியது,
அவள் வாயில் இருந்து வந்த..,
அந்த வார்த்தைக்காக மீண்டும் பிறந்தேன்,
இந்த சாக்கடையை...
அன்பாலேயே கழுவினாள்...
அம்மா சொல்லித் திருந்தவில்லை,
அப்பா சொல்லித் திருந்தவில்லை ,
ஆசான் சொல்லித் திருந்தவில்லை ,
நண்பர்கள் சொல்லித் திருந்தவில்லை ,
நாடு சொல்லியும் திருந்தவில்லை,
முழுசாய் மூன்று வார்த்தை பேச வராத ...
இந்த முகத்தை பார்த்து திருந்தி விட்டேன்..
வளர்ந்தாள்..,
நானும் மனிதனாக வளர்ந்தேன்...
படித்தாள்,
என்னையும் படிப்பித்தாள்...
திருமணம்
செய்து வைத்தேன் ,
இரண்டு குழந்தைகளுக்குத் தாயானாள்,
இரண்டு குழந்தைகளுமே...
பெரியவர்களாய் வளர்ந்து விட்டார்கள்,
நானும்கூட தாத்தாவாகி விட்டேன் ,
என்னை மனிதனாக்க...
எனக்கே மகளாய் பிறந்த...
அந்த தாய்க்காகக் காத்திருக்கிறது ...
ஊரே ஒன்று கூடி..,
உயிர்த் தண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறார்கள்,
எனக்குத் தெரியாதா என்ன?
யாருடைய பார்வைக்கப்புறம்...
பறக்கும் இந்த உயிரென்று?
வானத்தை பார்த்துக் காத்திருக்கிறேன்...
......................வாசலில் ஏதோ சலசலப்பு,
நிச்சயம் என் மகளாகத்தான் இருக்கும்..,
என் பெருவிரலை யாரோ
தொடுகிறார்கள் ,
அதோ அது அவள்தான்,
மெல்ல சாய்ந்து ...
என் முகத்தை பார்க்கிறாள் ...
என்னைப் போலவே...
கண்களில் மச்சம்,
சப்பை மூக்கு,
கருப்பு நிறம்,
நரைத்த தலைமுடி,
தளர்ந்த கண்கள்,
என் கைகளை முகத்தில் புதைத்துக் கொண்டு,
'அப்பா அப்பா' என்று குமுறிக் குமுறி அழுகிறாள்,😰😰😰😭😭
அவள் எச்சில்
என் பெருவிரலிட,
உடல் முழுவதும் ஈரம் பரவ...
ஒவ்வொரு புலனும் துடித்து...
#அடங்குகிறது....................
.......................
"தாயிடம் தப்பி வந்த
மண்ணும்...
கல்லும்கூட ,
மகளின் ...
கை பட்டால் காந்தச் சிலையாகும்! "
இதை படிக்கும்போது கண்கள் ஈரமானல் நீங்கள் நல்ல தகப்பனாக பாசமுள்ள பிள்ளையாக இருப்பீர்கள்🙏...

நன்றி 
#முகநூல் #படித்ததில் பிடித்தது 

Monday, June 12, 2017

கோயம்புத்தூர் பற்றி அறியாதவர்களுக்கு.

 கொங்கு தமிழ் பேசும் எங்கள் கோவை, தென்இந்தியாவின் மான்செஸ்டர், தமிழ்நாட்டில் இரண்டாவது பெரிய நகரம், கோவை சுற்றுபுறம் முழுவதும் சேர்த்து, இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாழும் ஊர்.

  கோவன் என்ற இருளர் தலைவன் பெயரில் உருவானதே கோவன் புத்தூர், அது உருமாறி கோயம்புத்தூர் ஆனதாக வரலாறு.

 14 சட்டமன்ற தொகுதிகளையும், 2 நாடாளுமன்ற தொகுதிகளையும் கொண்டது இந்த பெருநகர்.

  மேற்கு தொடர்ச்சி மலைகளின் அடியில் இந்நகரம் அமைந்துள்ளதால் குறைந்த பட்ச வெப்பநிலையான 12 டிகிரி அடிக்கடி இங்கு நிலவும், உலகின் இரண்டாமிட மிக சிறந்த சுவை கொண்ட சிறுவாணி தண்ணீர் இங்கு புகழ் பெற்றது. இங்கு நீர் ஆதாரத்திற்கு அத்திக்கடவும் உண்டு.

 புகழ் பெற்ற இந்து வழிபாட்டு தளங்கள், மருதமலை, பேரூர் பட்டீஸ்வரர், ஈச்சனாரி, கோனியம்மன் கோவில், வெள்ளியங்கிரி, ஈசா, காரமடை ரங்கநாதர், தென்திருப்பதி,  கிறிஸ்துவர்களுக்கு மைக்கேல், பழைய பாத்திமா சர்ச்கள், காருண்யா, முஸ்லீம்களுக்கு கோட்டை,  ரயில்நிலையம், போத்தனூர், உப்பிலிபாளையம் பகுதியில் அமைந்துள்ள பள்ளிவாசல்கள்.
     
 தொழில் மற்றும் பல்வேறு துறையில் மிக புகழ் பெற்ற சில பிரபலங்கள்,
 ஜி டி நாயுடு, நரேன் கார்த்திகேயன், ராஜேஷ் குமார், நிருபமா வைத்தியநாதன் உடுமலை நாராயணன், நா, மகாலிங்கம், ஜி கே சுந்தரம், சாண்டோ சின்னப்பா தேவர், அவினாசிலிங்கம் செட்டியார்,

சினிமா துறையில் சிவகுமார், மணிவண்ணன், சத்யராஜ், ரகுவரன்,  கவுண்டமணி, பாக்யராஜ், சுந்தரராஜன், நிழல்கள் ரவி, சின்னி ஜெயந்த், கோவை சரளா என பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

300க்கும் மேற்பட்ட பன்னாட்டு நிறுவனங்களும், ஆயிரக்கணக்கில் சிறு, குறு  தொழில் நிறுவனங்களும், இரண்டாயிரத்தும் அதிகமான தொழிற்சாலைகளும் இங்குண்டு.  

சுமார் நூற்றி ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஆரம்பிக்கப்பட்ட ஸ்டேன்ஸ் பள்ளி இன்றும் பெருமை குன்றாமல் இயங்கி வருகிறது.

சுற்றுலா தளங்கள் சிறுவாணி, கோவை குற்றாலம், பாரெஸ்ட் மியூசியம், வஉசி பறவைகள் பூங்கா, சிங்கநல்லூர் லேக் போன்றவை.
 ப்ளாக் தண்டர், கோவை கொண்டாட்டம், மகாராஜா என மூன்று தீம் பார்க்குகள் கொண்டது, இதில் ப்ளாக் தண்டர் அதிக நீர் விளையாட்டுகள் கொண்ட இந்திய அளவில் மிக பெரிய தீம் பார்க்குகளில் ஒன்று.

கோவையை சுற்றி அமைத்துள்ள முக்கிய சுற்றுலா தளங்களை கீழ்க்கண்ட லிங்கை சொடுக்கி பாருங்கள்
 நூறு கிலோ மீட்டர் சுற்றளவில் அமைந்துள்ள கோவை சுற்றுலா தளங்கள்

உபசரிப்பிற்க்கு எவ்வளவு புகழோ அதே போல் மதச்சண்டைக்கு புகழ் பெற்றது என ஒரு பிம்பம் இருந்தாலும் இங்கு வசிக்கும்  ஒவ்வொருவருக்கும் குறைந்த பட்சம் ஐந்து மிகநெருங்கிய (கவனிக்கவும் மிகநெருங்கிய) நண்பர்களாவது வேற்று மதத்தில் தான் உண்டு. உங்கள் கோவை தோழர், தோழிகளிடம் இதை சோதித்து கொள்ளுங்கள்    
நட்சத்திர விடுதிகள் விபரம் கீழ்க்கண்ட லிங்கில் உள்ளது
Star Hotels in coimbatore     

மூன்று பெரிய வணிக வளாகமும் (இன்னொன்று கட்டப்பட்டு வருகிறது), ஒரு சர்வதேச விமான நிலையமும், ரயில் நிலையமும் உண்டு.  
 சிங்காநல்லூரில் அமைத்திருக்கும் சாந்தி நிறுவனம், பெட்ரோல், உணவு, மருந்து ஆகியவற்றை எல்லோருக்கும் மிகமிக குறைந்த விலையில் அதிக  தரமானவற்றை தருகிறது.

வெளிநாட்டு பணத்தை ஈட்டி தரும் டாலர் தேசமான திருப்பூர் கோவையிலிருந்து நாற்பது கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

கோவையின் சுற்றுப்புரங்கள் மற்றும் அழகுகள் பற்றிய முக்கிய மூன்று பாடல்கள் கீழ்க்கண்ட லிங்கில் உள்ளன. இவைகளை பாருங்கள், எங்கள் ஊரை பற்றிய முழுமையை காட்சிப்பூர்வமாக நீங்களே உணர்வீர்கள்.


1. கோவை ஏந்தம்
2. கோவைப்பாட்டு
3. ரேடியோ சிட்டி கோவை பாட்டு


புரியும்படி சொல்ல வேண்டுமெனில், ஆறு மாதங்கள் நீங்கள் இங்கே தங்கி இருந்தால், நிரந்தரமாக தங்க விரும்புவீர்கள்.
அதுதான் கோவை


சற்றேறக்குறைய (சொந்த) சிறுகதை

அசந்து தூங்கிக்கொண்டிருந்த என்னை மாலை 3:55க்கு தர்மபத்தினி எழுப்பி "டைம் ஆகிடுச்சு கிளம்பு" என்றாள். 4 அல்லது 4:05க்கு அவளுக்கு நிறுவன வாகனம் 7 கிலோமீட்டர் தாண்டி வரும், அங்கே அவளை இறக்கி விட வேண்டும். எனக்கு நாலரைக்கு பணி தொடங்கும்.

 "அடிப்பாவி பழி வாங்கிட்டேயே", என்றதற்கு "நல்லா தூங்கிட்டு இருந்தே, அதான் தூங்கட்டும்ன்னு விட்டுட்டேன்" என்றாள். அவசரமாக புறப்பட்டு அவளை கொண்டு போய் சேர்க்க வேண்டியதை எண்ணி வண்டி எடுக்கையில் "ரீசார்ஜ் தீந்து போச்சு, போட்டு விடு" என்றவள்  காலையில் சொன்னது வேறு ஞாபகம் வந்து தொலைத்தது.

 வந்து போட்டு விடலாம் என அதை கிடப்பில் போட்டு விட்டு, வேகமாக நிறுத்தத்தை நோக்கி செல்கையில், "என்கிட்ட காசு இல்ல, போகும்போது தந்துட்டு போ" என்றாள், தலையாட்டி விட்டு பர்ஸை பேண்ட் பாக்கெட்டில்  தடவி பார்க்கையில் அவசரத்தில் மறந்து விட்டு வந்தது தெரிந்தது.
 அந்த வாகனம் மட்டும் போய் விட்டால் பஸ்ஸில் அவளை அனுப்ப  வேண்டும், பத்துபைசா கூட பாக்கெட்டில் இல்லை. திரும்ப வீட்டிற்கு வந்து எடுத்து சென்று பஸ் வைத்து விட வேண்டும். எனக்கும் வேலை நேரம் தாமதமாகும் "இந்த நாள் அநேகமாக நரக நாளா"க மாற தொண்ணூறு சதவீதம் வாய்ப்பு இருக்கிறது.


நல்லவேளையாக நிறுத்தம் வந்த போது அவள் நிறுவன வாகனம் இன்னும் வந்திருக்கவில்லை. "அப்பாடா", என இருந்தது.

மனைவியின் உறவினர் ஒருவரை அங்கு பார்க்க நேர்ந்தது,

"எப்படி வச்சிருக்கீங்க இவளை", என்றார்.
"பேக்ல பத்து பைசா இல்லாம, மொபைல்ல கூட பேலன்ஸ் இல்லாம, சிறப்பா வச்சிருக்கேன்" என்றேன். நல்லவேளை என் தர்மபத்தினியின் பார்வைக்கு நெருப்பில்லை, பொசுங்கி இருப்பேன்.
 கெக்க பேக்கே என சிரிக்க ஆரம்பித்த உறவினர் "எப்பவுமே தமாஸ் தான் தம்பி நீங்க". என்றார்
தமாஸா இது?

Sunday, May 7, 2017

நேற்றைய பெங்களுரு சம்பவம், எத்தன ட்விஸ்டு?

சாய்ராம்ன்னு ஒரு தனியார் நிறுவன மேனேஜரும் அவர் சம்சாரம் அம்சவேணியும் குடிகாரர்களாம், நேத்து நைட் புல்லா போதையை போட்டுட்டு அம்சவேணிக்கா (கொஞ்சம் கம்மியா குடிச்சிருக்கும் போல)  காரை ஓட்டிட்டு வந்திருக்கு. (புருஷன் பேரு சாய்ராம் என்பதை....)

வர வழியில எதுக்கோ பயங்கர சண்டை வர, அம்சவேணிக்கா மூஞ்சி மேல எவ்ளோ நாள் காண்டோ தெரியல, சாய்ராம் துப்பாக்கியை எடுத்து  மூஞ்சி மேலயே அடிச்சிருக்கார்.
 மூக்குல ரத்தம் வர பத்ரகாளி மாதிரி திரும்பின நம்ம வேணிக்கா, க்ரீச்ன்னு வண்டிய பிரேக் போட்டு நிருத்தீட்டு, ராமர் கிட்ட இருந்த துப்பாக்கிய பிடுங்கி கண்டபடி சுட ஆரம்பிச்சிருச்சு. சாய் கதவை திறந்துட்டு ஓட ஓட வெறித்தனமா விரட்டி விரட்டி சுட்ருக்கு, அதுல ஒரு குண்டு வயிற்றுல பட்ருச்சு.
  அண்ணா ஒரு பஸ் வர அதை நிறுத்தி ஓடிப்போய் உள்ள ஏற, பின்னாடியே வந்த அம்சாக்கா அந்த பஸ் ட்ரைவரை துப்பாக்கியை காட்டி மிரட்டி வண்டிய நிறுத்திருக்கு.
 அதுக்குள்ளே பஸ்க்கு உள்ள இருந்த யாரோ ஒரு புண்ணியவான் போலீஸ்க்கு போன் பண்ணி சொல்ல, போலீஸ் அங்க வந்து சாய்ராமை ஹாஸ்பிட்டல விட்டுட்டு, அக்காவை அரெஸ்ட் பண்ணியும் கூட்டிட்டு போய்ட்டாங்க.

 ஸ்டேஷன் போன அக்கா சரக்கு வாங்கி தரசொல்லி போலிஸ்கிட்ட செம்ம பிரச்சனை பண்ணிருக்கு. கொஞ்ச நேரம் கழிச்சு போதை தெளிஞ்ச பின்னாடி, "அய்யோ.... என் சாயிராம் வலி தாங்க மாட்டானே, நான் கெளம்பறேன், என்னை விடுங்கோ"ன்னு அழுதுகிட்டே இருந்துச்சாம்.

இத்தனை ட்விஸ்ட் கதைல கூட வராதுல்ல?

Saturday, May 6, 2017

இரண்டு வரிகளில் நான்கு திகில் கதைகள்

"வெளியே யார் இப்படி கதவை தட்டுவது?", என ஹாலில் டிவி பார்த்தபடி கோபமாக கேட்டான் அருண், ஜன்னல் வெளியே பார்த்த ஜமுனா அலறினாள், அங்கே கதவை தட்டியபடி கோபமாக, அச்சு அசலாக அதே போலொரு அருண் நின்றிருந்தான்
-----------------------------------------------------------------------------------

பேய்களை கண்டெல்லாம் பயப்பட தேவையில்லை, எதுவும் செய்யாது, நேராக, இடது வலதாக, சில சமயம் கட்டிலுக்கு அடியில் கூட இருக்கும். ஆனால் அவை தலைக்கு மேல் இருக்கும் சமயங்களில் பார்க்காதே உன்னை கொல்லாமல் விடாது
-----------------------------------------------------------------------------------

எங்கிருந்து "டொக் டொக்", என்ற சப்தம் வருகிறதென்றே தெரியவில்லை, அறையின் எல்லா பகுதிகளிலும் சோதித்து விட்டேன், ஆஆ... அது முகம் பார்க்கும் கண்ணாடிக்குள் இருந்து தட்டிக்கொண்டிருக்கிறது.
-----------------------------------------------------------------------------------
இரவு நிலா வெளிச்சத்தில் நடப்பது சுகமாக இருந்தது, என் கருப்பு நிழல் வெள்ளை நிறமாக மாறாத வரை
-----------------------------------------------------------------------------------

Thursday, April 27, 2017

கொஞ்சம் குடிக்க தண்ணி குடுங்க அண்ணே

"கொஞ்சம் குடிக்க தண்ணி குடுங்க அண்ணே", என்று ஒடிசலாக கை கால்களில் அழுக்கு படிந்து ஒரு பெண் இடுப்பில் மூன்று வயது குழந்தையோடு ஒரு பாட்டிலை வைத்துக்கொண்டு வீட்டின் முன் வந்து நின்றது.

கோடை நீர் பற்றாக்குறையால் பத்து நாட்கள் குழாய் தண்ணீர் வரவில்லை, எனவே காலையில்தான் வீட்டில் தண்ணீர் தீர்ந்து போய் ஒரு கேன் காசு கொடுத்து வாங்கி இருந்தேன்.

 கொஞ்சம் எரிச்சல் வேறு, உடைந்த பொம்மையை வைத்து பரிதாமாக பார்த்த குழந்தைக்காக அந்த பாட்டிலை வாங்கி தண்ணீர் ஊற்றி கொடுத்தேன்.

  "நன்றிண்ணே. தண்ணி வரலைன்னு யாரும் கொடுக்க மாட்டேங்கிறாங்க, நான் சித்தாள் வேலை செய்யுறேன்" என்று பக்கத்து கட்டிடத்தை காட்டியது.

"சரி" என்றேன். கிளம்புமாறு தெரியவில்லை. "அவ்ளோதானே கிளம்புங்க" என்றதற்கு, தயங்கியபடி  "இந்த வீடு நல்லாருக்காண்ணே" என்றது அந்த பெண்.
 "நல்லாருக்கே, அதுக்கு என்ன?"
 "நாங்கதான் கட்டினோம், இதோ இவ அப்போ மூணு மாச குழந்தை, இங்கன தான் தொட்டில் போட்டுருந்தோம்" என்று எங்கள் ஹாலை காட்டியது.
பொளீரென தலையில் அடித்தது போல் உணர்வு.
"ரொம்ப நன்றிம்மா, எனக்கு தெரியல"
 நம் வசதிக்காக சிரமப்பட்டவர்கள் இப்போது வேறிடத்தில், இக்கொடை தகிப்பில் செங்கல் சுமந்து.  இன்னொரு வீட்டை உருவாக்குகிறார்கள்.

இது போன்று எத்தனையோ எளிய மனிதர்களின் அடிமை வாழ்க்கையின் சுகத்தை நோகாமல் அனுபவிக்கிறோமென்ற நினைவு உறுத்துகிறது.

 என்னுள் இருக்கும் கொஞ்ச மனித தன்மையையும் உறிஞ்சி காசுக்கு அலையும் முழு சுயநலவாதியாய் மாற்றி விட்டதோ காலம்?

 "பாப்பா சாப்டாச்சா, உள்ள வாங்க சாப்பிடலாம்" என மனைவியை அழைக்க போனேன் "ஐயோ தண்ணிக்கே ரொம்ப நன்றிண்ணே, அதெல்லாம் ஒன்னும் வேணாம்"
 "நீங்க எப்போவென இங்க வந்து. எது வேணுமோ வாங்கிகோங்க அம்மா இருப்பாங்க" என்று சொல்லி அனுப்பி வைத்தேன்.

இந்த வேலை முடிவதற்குள் யாரெல்லாம் இங்கு வேலை செய்தது என கேட்டு அவர்களை அழைத்து ஒரு வேளை உணவாவது படைத்து என் நன்றியை தெரிவித்து விட வேண்டும்.

Friday, April 21, 2017

வெண்முரசு முதற்கனல் பார்வை

"உலக இலக்கிய புத்தகங்களில் மிக பெரும் நூலாக இது அமையும்", என்ற உறுதியுடன் எழுத ஆரம்பித்து பல தொகுதிகளை கடந்து விட்டு ஜெயமோகன் அவர்களின் பெருமுயற்சிக்கு மிக பெரிய நன்றிகள்.

ஜெமோவின் சில படைப்புகளில் மொழி சற்றே அன்னியமாக முதல் சில பக்கங்களில் தெரியும், (உதாரணமாக காடு) சில பகுதிகள் கடந்த பின் அப்படியே அதன் அழகியல் உள்ளே இழுத்து விடும், மீண்டும் மீண்டும் முதலில் இருந்து படிக்க தூண்டும். அது போல் இலக்கிய தமிழ் இதிலும் ஆரம்பிக்கிறது, பின்னர் அது நம்மை புராண காலங்களுக்குள் இயல்பாய் கலந்து விட செய்கிறது.

பிரமாண்டமான ஒரு வரலாற்று திரைப்படம் கண் முன் காட்சியாய் விரிவது போன்ற எழுத்து நடை, அதற்கு மேலும் அழகு சேர்க்கும் ஷண்முகவேலின்   படங்கள் (இவரின் ஓவியம் பற்றி தனி கட்டுரையே எழுதலாம் அவ்வளவு அறுபுதமான கிறங்கடிக்கும் நம்மை அந்த இடத்திற்கே கை பிடித்து அழைத்து செல்லும் மாயங்கள்).

 கடந்த 20 தினங்களால் என்னால் முதற்கனலை விட்டு வெளியே வர முடியவில்லை, திரும்ப திரும்ப படிக்கச் சொல்லும் எழுத்துப் போதை நிறைந்து கிடக்கிறது.

கிருஷ்ணை நதிக்கரையில் ஆரம்பிக்கும் முதல் தொகுதி அங்கேயே வந்து நிறைவு பெறுகிறது.

 அழகான செடியாய் மலர்ந்து மணம் வீச வேண்டிய அம்பை, கருகி அதிலிருந்து பெரும் காட்டு தீயாய் மாறி முதல் தொகுதி எங்கும் பற்றி எரிகிறாள். அந்த பெருநெருப்பின் விஸ்வரூபம் படிப்பவருக்கும் பரவி விடுவதில் ஆச்சர்யம் இல்லை.

இத்தொகுதியில் பீஷ்மரைமரை விட பெரிய ஞானி எனில் அது விசித்திர வீரியனே, ஒவ்வொரு நொடியையும் அறிந்து வாழும் உயிர்.  எப்போதும் மரணத்தின் பிடியில் இருக்கும் அவன், உயிர் பிரிகையில் படிப்பவர்களுக்கு ஏற்படும் ரணம் சாதாரணமல்ல. எனக்கு மிக பிடித்த பாத்திரப் படைப்பு.

 சரி தவறுகளுக்கு உட்படாமல், சிந்தை மாறாமல் தன் எதிரியை கொள்வதே வாழ்வென புறப்படும் சிகண்டியின் பிரம்மாண்டம் பிற்பகுதியை நிறைக்கிறது.

 சிறிது சிறிதாய் கிளை கதைகள் விரவி கிடக்கின்றன, அது என்னை, என் மனைவிக்கு கதை சொல்லியாய் மாற்றி விட்டது.

 எழுத்தழகு என்றால் என்ன, என்பதற்கான சில பதங்களை கீழ் தருகிறேன் சுவைத்து மகிழுங்கள்

"பசித்த நாய்க்குட்டி நான்குகால்களையும் ஊன்றி திமிறி கழுத்தை கட்டில் இருந்து உருவி ஓடிவந்து தன் இயற்கையால் மாமிச வாசனையை வாங்கிக்கொண்டு சிறியவாலை ஆனந்தமாகச் சுழற்றியபடி வேள்விப்பொருளாக வைக்கப்பட்டிருந்த மானிறைச்சியை நக்கி உண்ண ஆரம்பித்தது".

"அஸ்தினபுரி என்ற அழகியின் மான்விழிகளாக நீலத்தடாகங்கள் அமைந்தன. அவள் நீலக்கூந்தலைப்போல அங்கே பூம்பொழில்கள் வளர்ந்தன. மண்ணில் நாரைச்சிறகுகள்போல வெண்கூம்புமுகடுகள் கொண்ட மாளிகைகள் அதில் எழுந்தன. நீர்பெருகும் மாநதிகள் என சாலைகள் அந்நகருக்குள் ஓடின".

"திரும்பும் கழுத்துகளின் நளினங்கள், பறக்கும் கூந்தலை அள்ளும் பாவனைகள், ஓரவிழிப்பார்வையின் மின்வெட்டுகள், சுழித்துவிரியும் உதட்டு முத்திரைகள், அசையும் கைகளின் நடனங்கள், தோள்சரிவின் குழைவுகள், இடை வளைவின் ஒயில்கள், பின்னழகின் குவிதல்கள், முலைநெகிழ்வுகளின் பேரெழில்கள் வழியாக அவர் சென்றுகொண்டிருந்தார்"

இன்னும் பத்து பக்கம் வருமளவு எழுதிக்கொண்டே போகலாம், அவ்வளவு கொட்டி கிடக்கிறது. ஒன்றை மட்டும் என்னால் உறுதியாக சொல்ல முடியும். 
முதல் தொகுதியை ஆரம்பித்து விட்டீர்கள் எனில் முழு தொகுப்பையும் படிப்பதை உங்களால் நிறுத்த இயலாது. 

ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டும் எனில் "காலம் பல தாண்டி தமிழில்  நிற்கப்போகும் ஒரு அற்புதம்".

இரண்டாம் பாகமான மழைப்பாடலை முடித்துவிட்டு வருகிறேன்.