Saturday, December 17, 2016

ஆதிரை புத்தக விமர்சனம்

 சயந்தன் இலங்கையிலிருந்து இடம் பெயர்ந்து வெளிநாட்டில் வாழும் ஒரு இளைஞர், இவரின் பெயரற்றது என்ற சிறுகதை தொகுதியை படித்து முடித்த உடனேயே யோசிக்காமல் ஆதிரையை வாங்கினேன்.

  1977லில் ஆரம்பமாகும் இந்த நிஜங்களின் தொகுப்பு மூன்று தலைமுறைகளை கடந்து 2013 இல் முடிவடைகிறது.

  இதுவரை இலங்கையை நேரடியாக அறியாத, ஊடகங்களில், அரசியல் பிரசாரத்தில் மட்டுமே தெரிந்த, என் போன்ற சாதாரண தமிழ்நாட்டு வாசகனுக்கு, இலங்கை தமிழர்கள் வாழ்வு பற்றிய பிம்பம் சர்வ நிச்சயமாக உடைபடும். தூக்கம் தொலைய வைக்கும் சம்பவங்கள் நிறைந்திருக்கும். நான் நிறைய இரவுகளின் கொலைக்கள சம்பவங்களால் தூக்கம் தொலைத்தேன். அதற்காக சயந்தன் எதையும் மிகைப்படுத்தவும் இல்லை, எங்கள் நிலையை பார்த்தீர்களா என்று கெஞ்சவும் இல்லை, நம்மை நேரடியாக அவ்விடங்களுக்கு கூட்டி சென்று ஒரு மௌன சாட்சியாக வேடிக்கை பார்க்க வைக்கிறார். அவரும் ஒரு இரண்டு வரி கதை பாத்திரமாக வந்து போகிறார்.

 அன்றாட வாழ்க்கை பிடியில் சிக்கி தவித்த சாதாரண மனிதர்கள், அடுத்த கட்ட வாழ்க்கையில் காலடி வைக்கும் தருணங்களில் நடந்த கொடூரங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. இடம் பெயர்ந்தவர்கள் என்ற  சொல்லுக்கு பின்னிருக்கும் தீராவலியை நான் எப்படி விளக்கினாலும் உங்களால் புரிந்துகொள்ள முடியாது, கண்டிப்பாய் கிடைத்திருக்க வேண்டிய, சாதாரண வாழ்க்கையைக் கூட பறி கொடுத்தவர்களுடைய நிம்மதியில்லா போராட்டம் அது.

மலையக தோட்ட தொழிலாளியான சிங்கமலையின் ஒற்றையடி தடம் வழியாக புறப்படும் இந்த 664 பக்கங்கள் கொண்ட நெடும் கதையின் பெரும் பகுதி, எளிய மனிதர்களின் வாழ்வு பற்றியது, இழப்புகளின் வலியை பற்றியிருந்தாலும், இன்னொரு படி ஏறத்துடிக்கும் மனித இயல்பின் தீரா தேடல்கள் தான் களம். ஆண்களை ஏதாவது ஒரு வழியில் இழந்து விட்ட தாய்களின் நெடும்போர், அவர் வார்த்தையிலேயே சொல்லவேண்டும் எனில் தமிழன்னையின் கண்ணீர் துளி.

இலங்கை தமிழ் முதல் 50, 60 பக்கங்களிலேயே பழகி விடுகிறது, ஜெயமோகனின் காடு நாவலின் மொழியை புரிந்துகொள்ள எடுத்த சிரமங்களில் இது 5 சதவீதம் கூட இல்லை.

தனிகல்லடியை, எட்டேக்கரை தவிர மற்ற இடங்களை கூகிளில் கண்டுபிடிக்க முடிகிறது. யாழ், வவுனியா போன்ற பெருநகரங்களையும்  விட அதில் வரும் பல இடங்களை (ஆனையிறவு, கேப்பாப்புலவு பாதை, வட்டுவாகல்,தர்மபுரம், ஆலங்கேணி, இலுப்பைக்கடவை, இன்னும் பல) google map மற்றும் youtube காணொளி வழியாக படித்ததில் நான் அந்த பகுதிகளில் வாழ்ந்த, நன்கு அறிந்த ஒருவனாகவே மாறிப்போனேன்.  

சாதாரண வார்த்தைகள் வழியாக வனத்தின் வேட்டையும், மலரின் ஒற்றை சைக்கிள் பயணங்களும், எட்டேக்கரில் ஒளி பாய்ச்சப்படும் டார்ச்சும், நாமகளின் உடையழகும்,  சின்னாச்சிக்காக உருவாகும் வீடு பற்றிய பிம்பங்களும், கடற்கரைகளும், போர் கலைத்து போட்ட வாழ்க்கையும், சிறுவர்கள் முன்னாள் கொல்லப்படப் போகும் வணிகனும், மயில்குஞ்சனின் வழிதவறிய காடும், இன்னும் கொஞ்சம் உணவை யாசிக்கும் கெஞ்சலும்........  நேர்த்தியான திரைபடத்தின்  ஒலிப்பதிவை கண்முன் கொண்டுவரும் அழகுடன் மிளிர்கிறது.

 500 பக்கங்களில் இருந்து ராணுவத்தினர் சோற்று பொதிகளை போடும்வரை நடக்கும் நிகழ்வுகளை நான் எப்படி விளக்கி சொன்னாலும் அது நான் உணர்ந்ததை சொல்ல இயலாது, பக்கத்துக்கு பக்கம், துப்பாக்கியால் சுட்டதில் முதுகில் ஏறிவிட்ட புல்லட்டின் மிச்சம், அந்த வலியும், வேதனையும். அதை படித்தே உணரமுடியும்.

 காதல்களில், "குடும்பத்தில் ஆரும் வேண்டாமெண்டிட்டு என்னை மட்டுமே நம்பி வந்தவளடா" என்ற கதையிறுதி வாக்கியம் தனி கதையாகவே எழுதப்பட்டிருக்க வேண்டிய கண்ணீர் காவியம்.

 புலிகளை போற்றி பேசவும், தூற்றவும், ராணுவத்தின் நல்லது கெட்டதை அலசவும் சில பாத்திரங்கள் படைக்கப்பட்டிருக்கின்றன, அது சயந்தனின் அரசியல் நிலைப்பாட்டை தாண்டிய உண்மையான வாதங்களாக இருக்கக்கூடும்.

 நீங்கள் எந்தவிதமான வாசகராக இருந்தாலும், உங்களை இத்தனை பக்க நெடுகிலும் வழிதவறாமலும், சலிப்பை தராமலும்  கூட்டி செல்லும் இயல்பான எழுத்துக்கள் இதன் சிறப்பு. இங்கே ஈழ தமிழர்கள் பெயரால் நடந்த சில ஆதாயம் மிக்க அரசியலின் உண்மைத்தன்மையை புரிந்துகொள்ளவாவது இதை நிச்சயம் வாசிக்க வேண்டும்.

 என்னிடம் குறைந்தது நான்கு பக்கங்களை தாண்டும் கதை பற்றிய எண்ணங்கள் நிரம்பி வழிகின்றன, ஆனால் அதை பற்றி எழுதினால் படிக்கும் சுவாரஸ்யம் குறைய கூடும் என்ற எண்ணத்தில்தான் விரிவாக எழுதவில்லை.

 அரசியல் காரணங்களோ, தனிப்பட்ட கருத்து மோதல்களோ, இலங்கை தமிழர் நிலைப்பாடுகளோ எனக்கு இதுவரை இல்லை, நான் இந்த புத்தகத்தையும் எந்த எதிர்பார்ப்பு கொண்டும் படிக்கவில்லை. ஒரு சாதாரண வாசக மனநிலையின் என் எண்ணங்களைதான் நான் எழுதி இருக்கிறேன்.  


 2009 போருக்கு பிறகு சர்வதேச அழுத்தம் காரணமாக, சாலை வசதிகளும், நவீன கட்டடங்கள் சிலவும், 4 ஜி போன்ற தொழில் நுட்ப வசதிகளும், மக்கள் வாழ அமைதியான சூழலும் யாழ்ப்பாணம் போன்ற பெரு நகரங்களில்  ஏற்பட்டிருக்கிறது என்றும், அவைகளெல்லாம் பாதுகாப்புக்கு வந்து இன்னமும் வெளியேறாத இராணுவ வீரர்களுக்காகத்தான், தமிழர்களுக்கு சுதந்திரம் இன்னும் கிடைக்கவில்லை என்றும் இரு வேறு கருத்துகள் நிலவுகின்றன.

 அப்படி இருந்தாலும் அச்சம் முழுதும் நீங்கி, அந்த மன வருத்தங்கள் குறைந்து, புலம் பெயர்ந்த மக்கள் மீண்டும் நம்பிக்கையுடன் நாடு திரும்பவும், வளர்ச்சி காணவும், மனித நேயம் தழைக்கவும், அந்த காயங்கள் ஆறவும் இரண்டு தலைமுறைகள் கடந்து போக வேண்டும். இனியாவது அமைதியும் நிம்மதியும் அங்கு பரவட்டும்.    

 சில பயணங்களை, சில பிரிவின் வலியை, சில பாடல்களை, சரியான தருணத்தில் வீசப்பட்ட வார்த்தைகளை, எதிர்பார்ப்பின்றி தரப்பட்ட அன்பை மனது சுமந்து கொண்டே திரியும், ஏனெனில் அவைதான் நமக்கான பொக்கிஷங்கள். அதில் இப்போது ஆதிரையும் இணைந்திருக்கிறது.
நன்றி சயந்தன். 

No comments:

Post a Comment