Monday, August 22, 2016

வண்ணதாசன்

ஞாபகமிருக்கிறதா?
பத்து இருபது நாட்களுக்கு முன்பு சென்னையிலே மழை பெய்தது.
மழைக்கு என்ன அது எல்லா ஊரிலும்தான் பெய்யும்.
எல்லோருக்காகவும் பெய்யும்.
அன்று சென்னையில் மழை பெய்யது அவ்வளவுதான்.
மழை தான் பெய்கிற நேரத்தை அழகாகத் தானே தேர்ந்தெடுத்துக் கொள்கிறது.
சிலசமயம் இரவு முழுவதும் விடியவிடிய.
சிலசமயம் விடியும்போது அதிகாலையில்.
நான் பார்த்த சென்னை மழை மாலையில் பெய்தது.
இரவுக்கு முன்பு வருகிற மாலையில்.
ஒரு மோசமான கோடைகாலத்திற்கு பின்பு பெய்த முதல் மழையது. தொடர்ந்து கனமாக பெய்து கொண்டிருந்தது.
நான் வாசல் பக்கம் வந்து மழை பார்த்துக்கொண்டிருந்தேன்.
மழையைப் பார்க்கவும் செய்யலாம்,
கேட்கவும் செய்யலாம்.
உங்களுக்கு பிடித்த நீர்வண்ண ஓவியத்தை அது உங்களுக்கு பார்க்கத்தரும். உங்களுக்கு பிடித்த நீராலான ஒரு பாடலை அது இசைத்து பெய்யும். உங்களை ஒரு ஈர நடனத்திற்கு மழை இடைவிடாமல் அழைக்கும்.
மழையின் திருவிழாவில் குழந்தைகள் உடனடியாகவும், நாம் சற்று தாமதமாகவும் தொலைந்து போவோம்.
ஆனால், அன்று என்னைத் தவிர யாருமே தொலையக் காணோம்.
ஒரு வாடகைக்கார் ஓட்டுனர் புகைபிடித்தபடி நிற்கிறார்.
ஒரு தையல்காரர் வாகை மரத்தின் கீழ் தன் தையல் இயந்திரத்தை மூடி அவர் மட்டும் நனைந்து கொண்டிருக்கிறார்.
வேறு யாரும் தெருவிலே இல்லை.
நான் எதிர்பார்த்தது மழையில் நனைகிற குழந்தைகளை,
வீட்டிற்குள்ளிலிருந்து தெருவிற்கு ஓடிவந்து கைகளை உயர்த்தி மழைநடனம் ஆடுகிற குழந்தைகளை.
அந்த நடனத்தில் மழை எப்போது குழந்தைகள் ஆகிறது என்றும்,
குழந்தைகள் எப்போது மழையாகிறார்கள் என்றும் நமக்குத் தெரியாது. ஆனால், ஆகிவிடுவார்கள்.
அன்று மழை மட்டுமே பெய்து கொண்டிருந்தது.
ஒரு தனித்த பூனைக்குட்டி போல மழை தன் வருத்தமான குரலில் குழந்தைகளையெல்லாம் கூப்பிட்டுக் கொண்டேயிருந்தது.
தானியங்கள் இல்லாத இடத்திற்கு குருவிகள் வருவதில்லை.
குழந்தைகள் நனையாத தெருவிற்கு மழை வராமல் போகும் சாத்தியங்களும் உண்டு.
ஒரே ஒரு காகதக்கப்பல் விடுவதற்காகவும், அது சற்றுதூரம் போய் சாய்ந்து விழுவதற்காகவுமாவது மழைத்தண்ணீர் தெருவில் ஓட வேண்டும்.
குழந்தைகளை மழை பார்க்க சொல்லுங்கள்.
நீங்கள் அப்படி சொல்லவே வேண்டாம்.
எப்போதும்போல மழை பெய்யும் போதும் நீங்கள் அசையாமல் அமர்ந்து பார்க்கிற தொலைக்காட்சியை அணைத்துவிட்டு உங்கள் வாசலுக்கு அல்லது உங்கள் அடுக்ககங்களின் விளிம்புகளுக்கு எழுந்துவந்து நில்லுங்கள். குழந்தைகளும் உங்களோடு வந்து நின்று மழைபார்க்கத் துவங்கிவிடுவார்கள். உங்கள் கைகளை நீட்டி மழைத்தாரையை ஏந்துங்கள்.
ஒரு தலைவாழையின் பக்கக்கன்றுகள் போல உங்கள் குழந்தைகளும் தன்னுடைய கைகளை நீட்டி மழையை ஏந்தும்.
இதுவரையில் வந்த பண்டிகைகளில் கொளுத்திய மத்தாப்புகளைவிடவும் கூடுதலான அழகுடன் அந்த பிஞ்சு உள்ளங்கைகளில் மழைத்துளி விழுந்து தெறித்து பிஞ்சு வானவில்களை உண்டாக்கும்.
மழை பாருங்கள்,
மழையும் உங்களைப் பார்க்க விரும்புகிறது.
– வண்ணதாசன்
பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா.

முகநூலில் ஞாபகம் கொண்ட புஹாரி ராஜாவுக்கு நன்றி.

No comments:

Post a Comment