Wednesday, January 13, 2016

சங்கவி கவிதை

*சொற்களால் ஆனவள் *

ஒரு சொல்லை அம்பாக்குகிறேன்.
ஒரு சொல்லை வில்லாக்குகிறேன்.
ஒரு சொல்லை எடுத்து
ஒரு சொல்லை வளைத்து,
ஒரு சொல்லை தொடுத்து,
ஒரு சொல்லால் உன்னை வீழ்த்துகிறேன்.
வீழ்ந்த உன் உடலிலிருந்து வழிகிறது
செந்நிறமான ஒரு சொல்.

சொற்களால் ஆனது என் இருப்பு
தேர்ந்த கவிஞனின் சொற்களைத்திருடி,
நான் என்னை வடிவமைக்கிறேன்..
ஒரு சொல்லை உருவினால்
மொத்தமாய் சரிந்து விழும்..!
மேடான ஒரு சொல்லை உருவி
பள்ளமான இடத்தில் இட்டு,
தார் சாலையைப்போல சமன் செய்கிறேன்
எனது இருப்பை.
அணில் ஆடு இலை ஈசல்
இவற்றையெல்லாம் சித்திரங்களாய் செய்திருந்தேன்,
சொற்சித்திரங்களால் நிறைந்தது என் பால்யம்..!
மாசறக்கழுவிய யானையொத்த
சிறு மலையில் எழுதிப்பழகினேன்
எனது முதற்சொல்லை..
பால் பற்கள் விழுந்த இடத்தில்
முளைத்தது ஒரு சொல்..
பொன்னிற அந்தியில் வலியோடு
தொடைவழி தூமையாய்
வழிந்து ஒரு சொல்..
அப்போதிருந்து,
தனித்த உயிர் சொல் நான்.
மெய் சொல்லை கண்டு அஞ்சும்
தனித்த உயிர் சொல் நான்.
ஆதிக்கம் காட்டி ஆபாசம் நீட்டி,
மெய்யாக மெய் வேண்டி நிற்கிறது
மெய் சொற்கள்.
அன்றிலிருந்து,
சொற்களை உதறி ஊமையானேன்..
சிறுதவமுனியென குகையினிலேறி
பெருந்தவம் புரிந்தேன்..
கொடுவனம் கடந்து, லிபியற்ற சிறுவனாய்
இதயவடிவ கல்லை என்னிடம் நீட்டுகிறாய்.
இப்போது,
இதயத்தில் முளைக்கிறது ஒரு சொல்.!



No comments:

Post a Comment